கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை பொலிஸ் மா அதிபரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வாரம் பாராளுமன்றம் கூடிய போதிலும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் பல குற்றச்சாட்டுக்களை மாத்திரமே தமது கட்சி மீது சுமத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாராளுமன்ற அமர்வுகள் 4 நாட்களாக இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்த விடயங்களை பேசுவதற்கு 2 நாட்களை எடுத்துக் கொண்டனர்.
நான் ஒரு நாளை எடுத்துக் கொள்ள சொன்னேன். மக்கள் பிரச்சினைகளை முதலில் பேசுவோம். பிறகு அதைப்பற்றி பேசுவோம் என கூறினேன். இல்லை இல்லை இரண்டு நாட்களும் பேசுவோம் என்றார்கள்.
எனினும் இரண்டு நாட்களுக்கு பிறகும் எம்.பிக்கள். வீடுகள் சேததத்தை பற்றியே பேசுகின்றார்கள். தினேஷ் குணவர்த்தன தனது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்.
எனவே இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாகவும் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.