தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் ஒன்றிணைத்த போர் வீரர்கள் வெற்றி பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அதேநேரம், தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, தமிழ் மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த மே18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளாகும்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நந்திக்கடல் தடாகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் உயிரிழந்ததையடுத்து, 30 வருடங்களாக நாட்டை ஆக்கிரமித்திருந்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை துடைத்தழிக்க முப்படை வீரர்களினால் முடிந்தது.
மிக மோசமான போரின் கடைசி நாட்களில் பொதுமக்களைப் பாதுகாக்க உலகத்தரம் வாய்ந்த மனிதாபிமான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் காவல்துறை மற்றும் முப்படைகளும் முக்கியப் பங்காற்றியது.
பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் போர்வீரர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இலங்கை மக்களால் மறக்க முடியாது என போர் வெற்றியின் நினைவலைகளை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமல்லாது, சுதந்திர சதுக்கத்தில் யுத்த வெற்றியை நினைவுகூரும் நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ; முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க கருத்து வெளியிட்டார்.
போர்வீரர்களின் உயிரைக் காப்பாற்றிய தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலகில் மிகவும் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை இலங்கை தோற்கடித்து நாட்டில் அமைதியை கொண்டு வந்து 13 வருடங்கள் ஆகிறது.
விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட 295 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களை எமது பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர் – இது இன்றுவரை உலகில் எந்தவொரு இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மீட்புப் பணியாக உள்ளது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் வடக்கு வாழ் தமிழர்களும் இன்று அனுசரிக்கின்றார்கள்.
தனித் தமிழ் ஈழம் என்ற முழக்கத்தோடு உலக நாடுகளில் உதவியோடு இருந்த இலங்கையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது ஒரு பெரும் படையான பிராபகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள்.
தங்களுக்கு விடுதலையை வாங்கி தர உதித்த ஒரு உன்னத தலைவனாக பிராபகரனை கருதினர் இலங்கை வாழ் தமிழர்கள்.
அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி.
இங்கு இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஈழ தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை இராணுவம்.
இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் பலர் காணாமல் போயினர். பல நூறு பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தமிழ் மக்கள், தங்கள் ரத்தத்தை ஆகுதியாக்கி, ஆறாக ஓட விட்ட மண்தான் முள்ளிவாய்க்கால்.
இதன் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வீரமும் கண்ணீரும் ரத்தமும் ஒருங்கே கலந்து உருவாகிய முள்ளிவாய்க்கால் என்ற கோர சம்பவம் பதியப்பட்ட நாள் இன்றாகும்.
இலங்கை வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு கடற்கரை முள்ளிவாய்க்கால்.
பல நாடுகளில் ஆயுத உதவியோடு அசுர பலத்தோடு இருந்த இலங்கையை எதிர்த்து உணவின்றி உறக்கமின்றி இருந்த தமிழ் மக்கள் இறுதிவரை போராடினார்.
எப்படியாவது போரில் வென்று விடும் வேண்டும் என்று எண்ணி இரசாயன கொத்து குண்டுகளை அள்ளி வீசி மக்களை தொடர்ந்து கொன்று கொண்டிருந்தது இலங்கை இராணுவம்.
2019ஆம் ஆண்டு மே மாதம் 16, 17 ஆகிய நாட்களில் நடந்த இந்த கொடுமை இதுவரை உலகில் எங்கேயும் நடக்கவே இல்லை என்னுமளவுக்கு முள்ளிவாய்க்காலில் இராணுவம் தமிழ் இனத்தை கொன்று புதைதுக் கொண்டிருந்தது.
ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 1 இலட்சம் ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நினைவு கூரும் தினத்தில் அனைவரும் ஒன்று திரண்டு இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதுடன் நீதிக்கான பயணத்தில் நம்பிக்கையுடன் செயல்படுவோம் என உறுதி எடுப்போம் என பாராளுமன்ற அரிய நேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் ஆவண திரைப்படம் உலகம் எங்கிலும் பார்க்கக்கூடியதாக வெளியிடப்படும். இதில் உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்ற உள்ளனர். சரியாக மாலை 6 மணி 18 நிமிடத்தில் (மே 18 18:18 மணிக்கு) அனைத்து மக்களும் இணைந்து ஒளி ஏற்றுவோம்; எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.