தனிமனித சுதந்திரம் பொதுநலனைப் பாதிக்க அனுமதிக்கலாகாது: பதுக்கல் வியாபாரம் குறித்த இஸ்லாமிய கண்ணோட்டம்!

Date:

மக்களுக்கு சில பொருட்கள் தேவைப்படும் காலத்தில் அவற்றை சந்தைக்குக் கொண்டுவராமல் எதிர்காலத்தில் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவற்றை சேமித்து வைப்பதே பதுக்கலாகும்.
இவ்வாறு மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை தடுத்து வைப்பதும், பதுக்கிவைப்பதும் பாவமான குற்றச்செயல் என இஸ்லாம் கூறுகிறது.
அடிப்படையில் இஸ்லாம் உழைப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதுடன் அதற்கான சுதந்திரமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தனிமனிதர்களது உழைப்பு முயற்சிகள் பொது மக்களுக்கு இடையூறாகவும் பொருட்களும் சேவைகளும் அவர்களுக்கு சுதந்திரமாகவும் தாராளமாகவும் கிடைப்பதற்கு தடையாகவும் அமையும் பட்சத்தில் அங்கு இஸ்லாம் தலையீடு செய்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தனிமனித சுதந்திரம் பொதுநலனைப் பாதிக்க அனுமதிக்கலாகாது என்ற வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறன. பதுக்கலையும், பொதுமக்களது நுகர்வின் மீதான அத்துமீறலாகவும் அநியாயமாக கருதும் இஸ்லாம் அதனை பெரும் குற்றமாகவும் சமூகத்துரோகமுமாகவும் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய இழிந்த நடவடிக்கையாகவும் கருதுகிறது.
பதுக்குவது மனித சமுதாயத்தின் மீது இரக்கமில்லாத, சுயநலமிகளான, இறுக்கமான மனம் கொண்டவர்களது பண்பாகும்.
இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமி அவர்கள் பதுக்கல் என்பது பெரும்பாவங்களில் ஒன்று என்று கூறுவதுடன் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உணவை ஒருவர் அவர்களுக்கு விநியோகிக்காமல் வைத்திருந்தால் அதனை விற்கும்படி அவர் கட்டாயப் படுத்தப் படுவார் என்ற கருத்தில் அறிஞர்கள் ஏகோபித்து இருப்பதாக குறிப்பிடுகிறார்.
பொதுவாக வணிகர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. அத்தியாவசியமான பொருள்களைப் பதுக்கி வைத்து, விலை ஏறுவதை எதிர்பார்த்து, விலை ஏறும் போது கொண்டு வந்து அதிக விலையில் விற்பது தான் அந்தப் பழக்கமாகும்.
பதுக்கல் பல வடிவங்களில் இடம்பெறலாம்:-
1. சந்தையில் தாராளமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருளை மக்களுக்கு நியாயமான விலையில் விநியோகம் செய்வதையும் விற்பதையும் நிறுத்தி வைத்தல்.
2. தொழிற்சாலையிலோ, பண்ணையிலோ அல்லது வேறு எங்காவது ஓர் இடத்திலோ இடம்பெறும் மக்களுக்குத் தேவையான பொருட்களின் உற்பத்தியை நிறுத்துவது. அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் உற்பத்தியை இரட்டிப்பாக்க உத்தேசிப்பது.
3. வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதையோ அல்லது உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களாக இருந்தாலும் அவற்றை சந்தைக்கு கொண்டுவருவதையோ நிறுத்துவது.
4. பிற்காலத்தில் அதிக விலையை நிர்ணயிக்கும் நோக்கத்துடன் சந்தையில் இருக்கும் பொருட்களை சேகரித்து சேமித்து வைப்பது. இதனை நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களோ அல்லது மற்றவர்களோ செய்வது.
5. மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதைத் தடுப்பது.
பதுக்கப்படுபவை பொருட்களாகவோ சேவைகளாகவோ இருக்கலாம். அந்தவகையில் பொருட்கள், மருந்து வகைகள், ஆடை அணிகள், நிலபுலன்கள் தொழில் துறைகளுடன் சம்பந்தமான அனுபவங்கள் மற்றும் நலன்களும் இவற்றில் அடங்கும்.
இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் பதுக்கல் ஹறாம் என்பதற்கு அல்குர்ஆன் ஸுன்னாவிருந்தும் பல ஆதாரங்களை முன் வைக்கிறார்கள்.
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِي جَعَلْنَاهُ لِلنَّاسِ سَوَاء الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ
என்ற வசனத்தில் வரும், ‘இல்ஹாதுன் பிழுள்மின்’ என்ற சொற்றொடர் இதனைக் குறிக்கும் என இமாம்களான குர்துபி, கஸ்ஸாலி போன்றோர் கருதுகின்றனர்.
ஹதீஸ்களில்:-
عن معمر بن عبد الله- رضي الله عنه- عن رسول الله صلّى الله عليه وسلّم قال: «لا يحتكر إلّا خاطىء» ( مسلم (1605) وابن ماجه (2154)
நபி (ஸல்) அவர்கள்:- “குற்றவாளியைத் தவிர வேறு யாரும் பதுக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1605).
‘காதிஃ’ என்ற பதத்தை அல்குர்ஆன் மிகப் பயங்கரமான ஒரு குற்றம் என்ற கருத்தில் தான் பிரயோகித்துள்ளது.
உதாரணமாக:-
{إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ} (القصص:8)
” ஃபிர்அவ்னும் ஹாமானும் அவ்விருவரது படைகளும் ‘காதயீன்களாக’ இருந்தார்கள் “(அல்கஸஸ்:08) என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே வரலாற்றில் இருந்த மிக பயங்கரமான அநியாயக்காரர்களுடன் சம்பந்தப்படுத்தி கூறப்பட்ட பயங்கர குற்றதத்தையே பதுக்கலில் ஈடுபடுபவர்கள் செய்கிறார்கள்.
இந்த நபிமொழியில் வரும் காதிஃ – குற்றமிழைத்தவன் என்ற பதம் தவறிழைக்கும் பாவியைக் குறிக்கும் என இமாம் ஸன்ஆனி குறிப்பிடுகிறார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள்:-
من احتكر على المسلمين طعاما ضربه الله بالجذام والإفلاس (ابن ماجة (2155) ، وفي الزوائد: إسناده صحيح، ورجاله موثقون وصححه الشيخ أحمد شاكر رقم (135)
“ஓர் உணவை முஸ்லிம்களுக்கு வழங்காமல் பதுக்கிவைப்பவன் மீது அல்லாஹ் குஷ்டரோகத்தையும் வங்குரோத்து நிலையையும் சாட்டிவிடுவான்” எனக் கூறினார்கள். (ஸுனன் இப்னு மாஜா -2155)
இதற்கு இமாம் முனாவீ(ரஹ்) தனது ‘ஃபைளுல் கதீர்’ ல் விளக்கம் கூறும்போது,’பதுக்கல் செய்பவன் தனது உடலை வளர்க்கும் மற்றும் தனது சொத்து செல்வங்களை பெருக்கும் நோக்குடன் தான் அவ்வாறு பதுக்குகிறான் என்பதனால், அல்லாஹ் அவனது உடலுக்கு குஷ்டரோகத்தையும் சொத்துக்களில் வங்குரோத்து நிலையையும் சாட்டி சீரழிக்கிறான். ஆனால், மக்களுக்கு பயன்மிக்க காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பும் ஒருவனது உடலிலும், சொத்து செல்வங்களிலும் பாக்கியங்களை சேர்த்துவிடுவான்’ என்று விளக்குகிறார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள்:-
من احتكر طعاما أربعين ليلة، فقد بريء من الله تعالى وبريء الله تعالى منه، وأيّما أهل عرصة أصبح فيهم امرؤ جائع فقد برئت منهم ذمّه الله تعالى» (أحمد (2/ 33) وقال الشيخ أحمد شاكر (7/ 49) برقم (4880) : إسناده صحيح.
“யார் ஓர் உணவை நாற்பது இரவுகள் பதுக்கி வைக்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பு அதாவது, பொறுப்பிலிருந்து தூரமாகிறார். அவரின் பொறுப்பிலிருந்து அல்லாஹ் தூரமாகிறான். ஒரு பிரதேசத்தில் இருக்கும் மக்கள் பசியுடன் தமது காலை பொழுதை அடைவார்களாயின் அவர்களது பொறுப்பில் இருந்து அல்லாஹ் நீங்கிக் கொள்கிறான்.”(முஸ்னத் அஹ்மத்: 2/33)
إن معقل بن يسار حين أثقله المرض فأتاه عبيد الله بن زياد (الوالي الأموي) يعوده فقال له: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: “من دخل في شيء من أسعار المسلمين ليغليه عليهم؛ كان حقًا على الله تبارك وتعالى أن يقعده بعظم من النار يوم القيامة”، قال: أنت سمعت من رسول الله صلى الله عليه وسلم؟ قال: غير مرة ولا مرتين.
(الصحيح المسند الصفحة أو الرقم : 1148 خلاصة حكم المحدث : صحيح)
 மஃகல் இப்னு யஸார் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டடிருந்த பொழுது உமையா கவர்னர் ஸியாத் அவர்கள் அவரை நோய் விசாரிக்க வந்தார். அப்போது மஃகல் அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள்:- “முஸ்லிம்களது விலைகளை அதிகரிப்பதற்காக எவராவது ஒருவர் அவர்களது விடயத்தில் தலையீடு செய்தால் அவரை மறுமை நாளில் அல்லாஹ் நரகத்தின் ஒரு பெரிய பகுதியில் உட்காரவைப்பான்.” என்று கூற நான் கேட்டேன்’ என்றார். அப்போது ஸியாத் ‘இதனை நபியவர்கள் கூற நீர் கேட்டீரா?’ என்று கேட்ட போது, மஃகல் அவர்கள் ‘ஆம் ஒரு தடவை அல்ல, இரு தடவை அல்ல (பலதடவைகள் கேட்டேன்)’ என்றார்.
மேலும் நபியவர்கள்:-
الجالب مرزوق والمحتكر ملعون (رواه الدارمي (2544)البيهقي في السنن (6/30)الحاكم في المستدرك (2164
“தேவையான பொருட்களைப் (பதுக்கி வைக்காமல் அவற்றை கடைவீதிக்கு) கொண்டு வருபவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான்.(அவற்றை) பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” எனக் கூறினார்கள்.
பதுக்கல் மூலம் பொருளீட்டுவது இன்னொருவகையில் பார்த்தால் பிறரது சொத்துக்களை முறையற்ற விதத்தில் சாப்பிடுவதாகும். அல்லாஹ் தன் திருமறையில் “உங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்!” (2:188) என்று கூறுகிறான்.
தெளபா செய்வது எப்படி?
ஒருவர் பதுக்கல் குற்றத்தில் ஈடுபட்டு விட்டு அதற்காக தெளபா செய்ய நாடினால் அவருக்கு அல்லாஹ் தெளபாவின் வாசலை திறந்து வைத்திருக்கிறான். தெளபா செய்வது என்பது வெறுமனே வாயால் ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என உச்சாடனம் செய்வதாக மட்டும் அமையமாட்டாது. முதலில் அவர் கைசேதப்பட்டு பதுக்கல் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்ததாக தான்னால் அநியாயம் இழைக்கப்பட்டவர்களது உரிமைகளை மீட்டிக் கொடுக்க வேண்டும்.
فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم (المائدة: 39)
மேலுள்ள வசனம் களவுக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் தெளபா செய்யும் முறை பற்றி கூறுகிறது. களவு என்ற அநியாயத்தை இழைத்தவர் அதனுடன் சேர்த்து தன்னை சீர்படுத்திக் கொண்டால் (இஸ்லாஹ்) தான் அல்லாஹ் மன்னிப்பான் என இவ்வசனம் கூறுகிறது. கனவின் பின்னர் திருந்தி இஸ்லாம் செய்வது என்றால் களவு எடுக்கப்பட்ட பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதாகும்.
பணம் மற்றும் சொத்து செல்வங்கள் மீதான அத்துமீறல்களைச் செய்த அனைவருக்குமான பிராயச்சித்தம் இப்படியாகவே அமையும். வட்டியெடுத்தவர், பொதுச் சொத்துக்களையோ அநாதைகளது சொத்துக்களையோ அபகரித்தவர், இலஞ்சம் எடுத்தவர் போன்றோர் இப்படித்தான் தமது திருந்த வேண்டும்.
எனவே, ஒருவர் தான் பதுக்கிய பொருளை சந்தைக்குக் கொண்டுவர வேண்டும். அல்லது விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான விலையில் அவற்றை வினியோகிக்க வேண்டும். அப்போது தான் அவரது தெளபா பரிபூரணமடைந்து அது அங்கீகரிக்கப்படும்.
சேமிப்பும் பாதுக்கலும்
ஆனால், சேமிப்புக்கும் பதுக்கலுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது.
சேமிப்பு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது. சேமிப்பு என்றால் ஒருவர் பிற்காலத்தில் தனக்கு கஷ்டம் என்று வராமல் இருப்பதற்கு தனது வருமானத்தில் இருந்து ஒரு தொகையை சேமித்து வருவதாகும்.
நபி யூசுப் (அலை) அவர்கள் அடுத்த ஏழு வருடங்கள் நாட்டு மக்களைப் பாதிக்கவிருக்கும் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள தானியங்களை சேமிக்கும் படி ஆலோசனை கூறினார்கள்.
النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ كانَ ويَحْبِسُ لأهْلِهِ قُوتَ سَنَتِهِمْ.(صحيح البخاري الرقم: 5357)
நபி(ஸல்) அவர்கள் “ஒரு வருடத்திற்கு தனது குடும்பத்தாருக்குத் தேவையான உணவுப்பொருட்களை சேமித்து வைத்தார்கள்” (ஸஹீஹ் அல்புஹாரி- 5357)
மதீனாவில் இருந்த முஸ்லிம்கள் உள்ஹிய்யா இறைச்சியை சாப்பிடவும் சேமிக்கவும் ஸதகா செய்யமுடியும் என்று கூறிய நபியவர்கள் மதீனாவுக்கு வெளியிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற பொழுது மாத்திரம் இறைச்சியை மூன்று நாட்களுக்கு சேமிக்க வேண்டாம் என்று தற்காலிகமாக தடுத்தார்கள். அந்த நிலை மாறிய போது மீண்டும் சேமிக்க அனுமதித்தார்கள்.
எனவே, பதுக்கல் என்பதையும் சேமிப்பை வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்.பதுக்கலால் மக்களது அடிப்படையான தேவைகளில் தேக்கம் ஏற்பட்டால் அரசு தலையீடு செய்து சந்தையின் சீரான இயக்கத்தை ஊர்ஜிதம் செய்யும்.
நபிமொழிகளை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் வியாபார நடவடிக்கை ஹராமான பதுக்கலாகக் கருதப்பட இரு நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்:-
1. அந்த சந்தர்ப்பத்தில் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
2. பதுக்கலில் ஈடுபடுபவர் விலையைக் கூட்டுவதன் மூலம் தனது வருமானத்தை பலமடங்கு அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வாறு செய்ய வேண்டும்.
வியாபாரத்தில் பெருந்தன்மை
எனவே, வியாபாரத்தில் விற்கும் போதும் வாங்கும் போதும் இரு தரப்பிலும் பெருந்தன்மையாக நடந்து கொண்டால் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் பெரும்பாலும் நல்லுறவு இருப்பதில்லை. வியாபாரி நம்மைச் சுரண்டுகிறார்; ஏமாற்றுகிறார் என்ற எண்ணம் தான் அதிகமான மக்களிடம் உள்ளது. மக்கள் இவ்வாறு நினைப்பதற்கு ஏற்பவே அதிகமான வியாபாரிகள் நடந்து கொள்கிறார்கள்.
ஆனால், வியாபாரம் என்பது சம்பாதிப்பதற்கான வழிமுறையாக இருந்தாலும் அதில் பெருந்தன்மையாக நடந்து கொண்டால் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத்தரும் நல்லறங்களில் ஒன்றாக அமைந்து விடுகிறது.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى»صحيح البخاري (2076)
நபிகள் நாயகம் (ஸல்):- “வாங்கும்போதும் விற்கும்போதும் வழக்காடும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!”
(நூல் : புகாரி – 2076) என்று கூறினார்கள்.
இந்தப் பெருந்தன்மை என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும் என்பதால் தான் விற்கும் போதும், வாங்கும் போதும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகமான லாபம் வைத்தல், விற்ற பொருளை மாற்றிக் கேட்கும் போது மாற்றிக் கொடுத்தல், கடுகடுப்பாக இல்லாமல் மலர்ந்த முகத்துடன் இருப்பது போன்றவை வியாபாரிகள் கடைப்பிடிக்கும் பெருந்தன்மையில் அடங்கும்.
வியாபாரியை எதிரியாகப் பார்க்காமல் இனிமையாக அணுகுதல், பாதிப்பு இல்லாத அற்பமான குறைகளை அலட்சியப்படுத்துதல் போன்றவை நுகர்வோர் கடைப்பிடிக்க வேண்டிய பெருந்தன்மையாகும்.
வல்லவன் அல்லாஹ் எமது உழைப்புக்களை ஹலாலானவையாக அமைத்துக்கொள்ள அருள்புரிவானாக!
நன்றி
அஷ்ஷைக் பளீல் (நளீமி)

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...