நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற் கொண்டு இரண்டு வார காலத்திற்கு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தில் வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய நாட்டின் நாளாந்த எரிபொருள் பாவனையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இந் நிலையில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று மாலைக்குள் எடுக்கப்படும் எனவும், இது தொடர்பான அரசாங்கத்தின் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் நாளை (17) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் காலத்தில் இருந்தது போல் நாடு குறுகிய கால ஊரடங்குக்கு உட்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியும் பிரதமரும் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளதுடன், அடுத்த வாரம் மற்றுமொரு எரிபொருட்கள் நாட்டிற்கு வரவுள்ளதால் அவ்வாறான தீர்மானம் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை ஒன்லைனில் நடத்துவது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இப்போதும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற நீண்ட வரிசைகள் உள்ளன. சில இடங்களில் வரிசைகள் 2-3 கிலோ மீற்றரை தாண்டியுள்ளதாக அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் கடைசி டீசல் கப்பல் நேற்று இலங்கை வந்தடைந்தது. அந்த எரிபொருள் தாங்கியின் பின்னர், பணம் செலுத்துவதன் மூலம் மீண்டும் இலங்கைக்கு எரிபொருள் தாங்கி ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எரிபொருள் மற்றும் எரிவாயுக் கலன்களுக்கு பணம் செலுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, 20 வீதமான தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 13,000 பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது 4,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.