இறைத்தூதர் பற்றிய சர்ச்சை பேச்சு: முஸ்லிம் நாடுகளில் எழும் எதிர்ப்பு கண்டனம்!

Date:

-லத்தீப் பாரூக் 

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி (பிஜேபி) யின் தேசியமட்டஉத்தியோகப் பூர்வ பேச்சாளர் நுபுர் ஷர்மா,மற்றும் பிஜேபி இன் புதுடில்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜின்தால் ஆகியோர் இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நிந்தனை செய்யும் வகையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளன.

இதனையடுத்து நுபுர் ஷர்மா கட்சியின் அங்கத்துவ உரிமையில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக பிஜேபியின் டில்லி தலைவர் அதேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

அதேபோல் நவீன் குமார் ஜன்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் ஷர்மாமன்னிப்புக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது கூற்றை எந்த நிபந்தனையும் இன்றிவாபஸ் பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். யாருடைய சமய உணர்வுகளையும் காயப்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரதுகருத்தின் காரணமாக உத்தரபிரதேசத்தின் கான்பூர்நகரில் வன்முறைகள் வெடித்ததை அடுத்தே அவர் இந்த மன்னிப்புக் கோரல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வன்முறையில் 40க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

1500க்கும் அதிகமானவர்கள் மீதுவன் முறையோடு தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் சர்மாவுக்கு எதிராக பலபொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் குவிந்துள்ளன.

இந்தசம்பவம் வளைகுடா நாடுகளில் பெரும் பிரதிபலிப்பைஏற்படுத்தி உள்ளன. குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதுவர்கள் அந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கண்டன அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தெரிவிக்கப்பட்டகருத்துக்களுக்கு எதிராகப் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவை திட்டவட்டமாக நிராகரிக்கப்படுவதாகவும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.


நிபுர் ஷர்மாமற்றும் நவீன் குமார் ஜிண்தால்
ஐக்கிய அரபு அமீரகம், ஒமான், இந்தோனேஷியா,ஈராக்,மாலைதீவு, ஜோர்தான்,லிபியா மற்றும் பஹ்ரேன் ஆகிய நாடுகளும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன. சவூதி வெளியுறவு அமைச்சு பிஜேபி பேச்சாளரின் கருத்தை மிக வனமையாகக் கண்டித்துள்ளது.

57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமியமா நாட்டு அமைப்பு (ஓஐஸி) மற்றும் பாகிஸ்தான் என்பனவும் இந்தியாவை வன்மையாகக் கண்டித்துள்ளன.

இந்தியா பொது மன்னிப்புக் கோர வேண்டும் எனதாம் எதிர்ப்பார்ப்பதாக கத்தார் அறிவித்துள்ளது. ‘எந்தத் தண்டனையும் இன்றி இவ்வாறான இஸ்லாமோபோபியாக ருத்துக்கள் தொடர அனுமதிப்பது மனித உரிமைகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

மேலும் பல பாரபட்சங்களுக்கும் ஓரம் கட்டலுக்கும் இது வழியமைக்கும். அது வெறுப்பையும் வன்முறையையும் மேலும் அதிகரிக்கும்’ என்று கத்தார் வெளியுறவு அமைச்சுஅறிவித்தள்ளது.

இந்தியாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளகருத்தில் ‘ராஷ்ட்ரிய சுயம் சேவாக்சங், இந்தியாவை பெரும் இக் கட்டானதோர் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

வெறுப்புணர்வைத் தூண்டுபவர்களுக்கு எதிராக மத்திய அரசுகடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தையும் இது ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

விகாஸ் பாண்டே என்ற பத்தி எழுத்தாளர் தனது கட்டுரையில் ஷர்மாமற்றும் ஜிண்தாலின் கருத்துக்கள் கடந்த சில வருடங்களாக இந்த நாடு கண்டு வரும் சமயரீதியானதுருவமுனைப்பைபிரதிபலிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களும் தாக்குதல்களும் 2014ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் கணிசமாக அதிகரித்துள்ளன என்று எழுதி உள்ளார்.

குவைத், கத்தார்,சவூதிஅரேபியா, பஹ்ரேன், ஓமான் மற்றும் ஐக்கியஅரபு அமீரகம் என்பனவற்றை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்புசபையுடனான (ஜிசிசி) இந்தியாவின் வர்த்தகம் 2020-21 காலப்பகுதியில் 87 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகின்றது.

மில்லியன் கணக்கான இந்தியர்கள் இங்குதொழில் புரிகிறார்கள் மற்றும் வாழுகின்றார்கள். இவர்கள் மூலமும் இந்தியாவுக்கு பெருந் தொகையான டொலர்கள் அனுப்பப்படுகின்றன. இந்தியா தனது சக்தி வளத் தேவை இறக்குமதிக்கும் பிரதானமாக இந்தப் பிராந்தியத்திலேயே தங்கி உள்ளது.

2014ல் பதவிக்குவந்ததுமுதல் இந்தியப் பிரதமர்நரேந்திரமோடி இந்தப் பிராந்தியத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் நபராகவும் இருந்து வருகின்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா ஏற்கனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது.

பரவலான வர்த்தகத் தொடர்புகளுக்காக ஜிசிசி உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 2018ல் அபுதாபியில் இந்துகோவில் திறந்து வைக்கப்பட்ட வரலாற்று முக்கியநிகழ்வில் மோடி கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானபின்னணியில் இந்தியாவுக்கு எதிரான அலையில் ஐக்கியஅரபு அமீரகம் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகக் காணப்படுகின்றது.

அமீரகத்துடனும் ஏனைய சில முஸ்லிம் நாடுகளுடனும் இந்தியா அண்மைக் காலங்களில் ஏற்படுத்திக் கொண்ட வெற்றிகரமான ராஜதந்திர உறவுகளும்; தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

ஈரானுடனான டில்லியின் உறவுகள் கடந்த காலங்களில் மந்த நிலையில் இருந்தாலும், விரைவில் ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹ்ஹையானின் புதுடில்லி விஜயம் அதில் சிலமாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இப்போது அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகள் உட்பட ஏனைய வெளிநாட்டுத் தலைநகரங்களில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் விமர்சிக்கப்படுகின்ற போது இந்திய எப்போதும் தனதுநிலைப்பாட்டை சாதகமாக்கியே கருத்துக்களை முன் வைத்து வந்துள்ளது.

ஆனால் இந்தவிடயத்தில் இந்திய ராஜதந்திரிகள் துரிதமாகச் செயற்பட்டு பதற்றத்தை தணிக்கும் வகையில் மன்னிப்புக்களை வெளியிட்டுள்ளதோடு சேதங்களைகட்டுப்படுத்தும் முயற்சியிலும் விரைவாக செயற்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது என்று வில்ஸன் சென்டர் என்ற சிந்தனா வட்டத்தின் ஆசிய திட்டத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மைக்கல் குகெல்மன் தெரிவித்துள்ளார்.

கத்தாரிலும் குவைத்திலும் உள்ள சிலபிரபலமானகடைத் தொகுதிகளில் இருந்து இந்தியஉற்பத்திகள் அகற்றப்பட்டு பகிஷ்கரிக்கப்படுவதாகவும் சிலதகவல்கள் வெளியாகி உள்ளன.

குவைத்தில் உள்ள அல் அர்தியா கூட்டுறவுக் கழக சுப்பர் மார்க்கெட்டில் ‘நாம் இந்தியஉற்பத்திகளை நீக்கிவிட்டோம்’ என்று அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள வாசகம் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமய ரீதியாக மக்களைத் துருவப்படுத்தும் செயற்பாடுகள் பிஜேபி பதவிக்கு வந்தது முதல் அதிகரித்துள்ளதாக பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாரனாசியில் பலநூற்றாண்டுகள் பழமையானஒருபள்ளிவாசலில் தாங்கள் வழிபாடு நடத்த அனுமதி தரவேண்டும் எனக் கேட்டுசில இந்து சமயவாத குழுக்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளன.

இதனையடுத்து கடந்த சில வாரங்களாக அங்கு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தரைமட்டமாக்கப்பட்ட ஒரு ஆலயத்தின் மீதுதான் அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதுஎன இந்து குழுக்கள்; இப்போது உரிமைகோரி உள்ளன.

ஆத்திரமூட்டும் வகையிலானவிவாதநிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் நடத்தி வருகின்றன. சமூக ஊடகங்கள் தமது பங்கிற்கு கட்டுக் கடங்காமல் வெறுப்புணர்வை பரப்பிவருகின்றன.

வலதுசாரி அமைப்புக்களோடு இணைந்து பணியாற்றும் பலரே ஊடகங்கள் வழியாக இவ்வாறான கருத்துக்களைதொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர்.

பிஜேபிஉரிமைகோரிஉள்ளதுபோல் தற்போதுசர்ச்சைக்குள்ளாகி இருக்கின்ற ஷர்மா ஒரு தனி நபர் அல்ல. அவர்கட்சியின் உத்தியோகப்பூர்வ பேச்சாளர். பிஜேபி இன் கருத்துக்களை வெளியிடும் இலக்குதான் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணி.

தற்போதைய சர்ச்சை பற்றி சர்வதேச சமூகம் கொதிப்படைந்தமை இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும் என்பதே ஆய்வாளாகளின் கருத்தாக உள்ளது.

பிரிவினை வாதஅரசியல், சர்வதேச மட்டத்தில் தாக்கத்தை விளைவிக்கக் கூடியது என்ற பாடத்தை இந்தியா இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

நாட்டில் விஷமத்தனமானஅரசியல் அதிகரிக்கின்ற போது இந்தியாவுக்குள் நடப்பது, இந்தியாவில் மட்டும் தங்கி விடுவதில்லை என்ற பாடத்தை இந்தியா தற்போது கற்றுவருகின்றது.

இந்தியாவின் சர்வதேசத் தொடர்புகள், பொருளாதாரமற்றும் இராஜதந்திர பங்குடைமைகள் விரிவடைந்தும் வலுவடைந்தும் வருகின்ற நிலையில் இந்தப் பாடம் இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது.

உள்ளுர்அரசியல் செயற்பாடுகள், இந்திய  சம்பந்தமாக சர்வதேச அரங்கில் மகிழ்ச்சி அற்ற நிலையை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என மைக்கல் குகெல்மன் மேலும் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் அரச செய்தி சேவையான டிஆர்டிவேர்ள்ட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் 2014ல் மோடி பதவிக்கு வந்தது முதல் வெறிபிடித்த இந்து குழுக்கள் பல முஸ்லிம்களையும் தலித் இனத்தவர்களையும் அடித்துக் கொன்றுள்ளனர்.

மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் அல்லது அதை எடுத்துச் சென்றார்கள் என்ற சந்தேகத்திலேயே இவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிர வலது சாரிபோக்குடைய குழுக்கள் காதல் விவகாரங்கள் தொடர்பாகவும் முஸ்லிம்கள் மீது மோசமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இது முஸ்லிம்களை இலக்கு வைக்க அவர்கள் கையாளும் ஒரு மூலோபாயமாகும்.

கொவிட்-19ஐ பரப்பினார்கள் என்றும் அவர்கள் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டினர். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்களைக் கூட இந்து குழுக்கள் இலக்கு வைத்து தாக்கி வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


நிபுர் ஷர்மாமற்றும் நவீன் குமார் ஜிண்தால் ஆகியோரைக் கைது செய்யுமாறு பரவலாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள்

இதனிடையே முஹம்மத் நபி சம்பந்தமாக இந்தியாவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக பரவலான கண்டனங்களைத் தெரிவிப்பதில் பல அரபு நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

இந்திய உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறு சமூகஊடகங்கள் வாயிலாக அந்தநாடுகளில் பரவலான கோரிக்கைளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஏற்பட்ட ஹிஜாப் சர்ச்சை, முஸ்லிம்களால் முன்னெடுக்கப்படும் இறைச்சி, மரக்கறி மற்றும் பழங்கள் விற்பனைகள் தொடர்பாகக் கிளப்பப்படும் சர்ச்சைகள் பற்றியும் இப்போது பல நாடுகளில் பேசப்பட்டுவருகின்றன.

ஏப்பிரல் மாத முற்பகுதியில் இடம்பெற்றஒரு இந்து சமயநிகழ்வின் போதுபல இடங்களில் பள்ளி வாசல்கள் மீது இந்து குழுக்கள் கற்களை வீசிதாக்குதல் நடத்தியுள்ளன.

பள்ளி வாசல்களுக்கு வெளியே திரண்டு இந்து சமய கீதங்களை மிகவும் சத்தமிட்டு இசைத்துள்ளனர்.

முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பேர்போன சில பிற்போக்குவாத இந்து சமய சுவாமிமார்கள் இந்திய முஸ்லிம்களை இனத்துவ ரீதியாக சுத்திகரிப்புச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து வருகின்றனர் என்று துருக்கி செய்திச் சேவையின் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டு மொத்த சர்ச்சைபற்றி அல்ஜஸீராவும் விரிவான அறிக்கை ஒன்றை பிரசுரித்துள்ளது. அரபு நாடுகளில் சமூக ஊடகவியலாளர்களை இந்த சர்ச்சை மேலும் கோபத்துக்கு ஆளாக்கி உள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் இந்திய உற்பத்திகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் பரவலாக வலியுறுத்தி வருகின்றனர்.

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அதிகரித்துவரும் வெறுப்புணர்வை அவர்கள் தீவிரமாகக்  கண்டித்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இஸ்லாமோபோபியாவை ஊக்குவிப்தைப் போலவே இந்தியாவும் அவற்றை பின் தொடருகின்றது என அல் ஜஸீரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அல்ஜஸீரா வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் சர்வதேச சமய சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைக்குழு (USCIRF) விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது வருடமாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...