எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமைச்சர்களின் பல உத்தியோகபூர்வ பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த 25ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு ஆய்வு விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் எரிபொருள் பிரச்சினை காரணமாக அது இரத்துச் செய்யப்பட்டதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் பலாலி விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக ரயிலில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக உத்தியோகபூர்வ வாகனத்தை தயார் செய்யாமல் ரயிலில் இருந்து இறங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்ததுடன் அதற்கேற்ப ரயில் பயணமும் திட்டமிடப்பட்டது.
அத்துடன் எரிபொருள் நெருக்கடி காரணமாக அமைச்சர் நிமல் சிறிபால யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை துறைமுகம் வரை சென்று அங்கிருந்து சிறிய வேன் ஒன்றில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக மேலும் சில அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களுக்குப் பதிலாக சிறிய வாகனங்களைப் பயன்படுத்துவதாகத் தெரியவருகிறது.
பல அமைச்சுக்களில் வாகனப் பாவனை 70 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.