போதைப்பொருள் பாவனை தற்போது நாட்டிலும் எமது சமூகத்திலும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இவ்வேளை, போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டமொன்று புத்தளத்தில் முக்கூட்டுத்தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் தோறும் குடும்பங்களைச் சீரழித்து, வருமானத்தை பாழ்படுத்தி, எதிர்கால சந்ததிகளை நிரந்தர நோயாளிகளாக மாற்றி வரும் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக புத்தளத்தின் முக்கூட்டு தலைமைகளான புத்தளம் நகர சபை, பெரிய பள்ளி, ஜம்இய்யத்துல் உலமா ஆகியவற்றுடன் பாதுகாப்பு தரப்புகளும் சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து இவ் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
அதனடிப்படையில் இவ்விடயம் சம்பந்தமான விழிப்புணர்வு செயற்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது சர்வமத தலைவர்களின் விசேட உரையும் சிறுவர் சிறுமியரின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துக்களை தாங்கிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும், புத்தளம் நகர சபை தலைவர் எம். எஸ். எம். ரபீக், உறுப்பினர்கள் மற்றும் அரச துறையாளர்கள், பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டனர்.
இவ் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நகர சபை தலைவர் எம்.எஸ். எம். ரபீக்,
போதை பொருள் பாவனைக்கு எதிரான தினத்தை சர்வேதேச தினமாக நினைவுபடுத்துவதை கடந்து இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், போதை பொருள் பாவனையாளர்களை சமூகம் தாக்குதல் மூலம் தண்டிக்க முற்படக்கூடாது, மாற்றமாக அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், புத்தளம் பிரதேச சபை பிரிவில் முள்ளிபுரம், பாலாவி பகுதிகளில் புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
தற்போதைய நிலையில் இருந்து மக்களை பாதுகாக்க பலர் முன்வந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் நகர சபையின் வட்டார ரீதியில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தொடர் விழிப்புணர்வுகளை முன்னெடுப்பது அவசியமாகும். இதற்கான உதவிகளை நாம் வழங்க தயாராகவுள்ளோம் என்றும் நகர சபை தலைவர் ரபீக் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் புத்தளம் நகர உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம். மின்ஹாஜ்,அவர்களின் விசேட உரையும் தமிழ் சிங்கள மொழியிலான போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு விளக்கக் காட்சிகளும் இடம்பெற்றன.