தனது நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களை தொடர அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் எம்.பியாகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் தம்மிக்க பெரேராவின் சட்டத்தரணி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தம்மிக்க பெரேராவின் நியமனத்தை சவால் செய்து, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அடிப்படை உரிமை மனு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.
தம்மிக்க அரசியலமைப்பின் 99A (தேசியப் பட்டியல்) உறுப்புரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 99A இன் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொதுஜன பெரமுன சமர்ப்பித்த பட்டியலிலும் அல்லது 2020 பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு நியமனப் பத்திரத்திலும் தம்மிக்க பெரேராவின் பெயர் இல்லை.
இந்த நிலையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஏற்கனவே தம்மிக்க பெரேரா, நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரான பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.