இன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரையிலான பல நடைபாதைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.
எவ்வாறாயினும், சட்டம் ஒழுங்கை மீறும் பாதசாரிகளுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக பிரதான நீதவான் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று நடத்தப்படவுள்ள பேரணி தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த அணிவகுப்பின் போது இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள பல வீதிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் நுழைவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என கறுவாத்தோட்டப் பொலிசார் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஷவீந்திர விக்கிரம நீதிமன்றில் தெரிவித்தார்.
ஸ்டான்மோ கிரசன்ட், பௌத்தலோக மாவத்தை, கெப்பெட்டிபொல மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், வார்ட் பிளேஸ், ஐந்தாவது லேன், ஃப்ளவர் ரோட், மெக்கன்சி வீதி, கேம்பிரிட்ஜ் பிளேஸ் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு செல்வதற்கான பாதைகளுக்கு தடை விதிக்குமாறும் அவர் கோரினார்.
எவ்வாறாயினும், கோரிக்கையை பரிசீலித்த நீதவான், அரசியலமைப்பின் 14வது சரத்தின் கீழ் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பேரணியின் போது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் பதிவாகும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95ஆவது சரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.