ரஸ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல, தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இந்த விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் இந்தப் பிரச்சினை குறித்து கலந்துரையாடியதாகவும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வணிக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. அத்தோடு சாதாரண இராஜதந்திர ரீதியாக ஆலோசிக்கப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தனது விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஸ்யா அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் ரஸ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனிதா லியனகே ரஸ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நேரில் அவரிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.