2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி முதல் சுற்று ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 26 ஆம் திகதி முடிவடையும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம். டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டம் ஜூன் 30 ஆம் திகதி தொடங்கி ஜூலை 9 ஆம் திகதி முடிவடையும். 106 பரீட்சை நிலையங்களில், 32,368 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் கடமைகளில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் டிசம்பரில் பரீட்சை நடத்தப்படும் போது, புத்தாண்டுக்கு முன்னதாக பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும், ஆனால் தற்போது நடைபெறும் பரீட்சைகளுக்கான திகதியை வழங்க முடியாது எனவும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை திணைக்களம் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சை இன்னும் நிறைவடையவில்லை எனவும் தெரிவித்தார்.
உயர்தரப் பெறுபேறுகள் கணனிப் பிரிவிலுள்ள மதிப்பீட்டுக் கிளைகளினால் மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் பெறுபேறுகள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.