இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆண்டு முழுவதும் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும், இதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2025ஆம் ஆண்டளவில் இலங்கை 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு 3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் நிலையில், சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் பிரதமர் இதன்போது, கேட்டுக் கொண்டார்.
மேலும், விருந்தோம்பல் துறையில் உள்ள பல ஊழியர்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதாலும், நாட்டில் உள்ள ஹோட்டல்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாலும் இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுமாறு உரிய அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
அதேநேரம், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் கலாசாரங்களில் தங்களை மூழ்கடிக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பிரதமர் விவாதித்தார்.
இதேவேளை, இலங்கையில் தற்போதுள்ள சுற்றுலாத் தடைகளை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை வற்புறுத்துவதற்கு இராஜதந்திர சமூகத்துடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுலா பயணிகளை மையமாக வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்களுடன் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.