பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 20 உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சில விடயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் இதனை தயாரித்தது யார் என்பது தொடர்பாகவும் பசில் தரப்பினரால் பிரதமரிடம் கேட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனக்கு அதுபற்றி தெரியாது என்றும், இது ஜனாதிபதியின் கோரிக்கைகளில் ஒன்றே என்று பிரதமர் விளக்கியுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது அந்தப் பதவிக்கு புதிய நியமனம் செய்ய வேண்டும்.
ஜனாதிபதி மட்டுமே பதவிக் காலத்தை நீட்டிக்க அல்லது புதிய நியமனம் செய்ய முடியும். அதற்கு நிதியமைச்சர் என்ற முறையில் பிரதமரின் பரிந்துரையை பெற வேண்டும்.