மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 21ஆவது திருத்தச் சட்டத்தை உதைத்து அரசாங்கம் இன்னமும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் நகர்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, நாட்டின் மீது அக்கறை இருந்தால், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைத்துள்ள 21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
‘சட்டத்தரணிகள் சங்கம், அறிஞர்கள், மதத் தலைவர்கள், இளம் வர்த்தகர்கள் மற்றும் எமது நாட்டில் உள்ள அனைவராலும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளே பாராளுமன்றத்தில் 21ஆவது திருத்தச் சட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளாகும்.
மேலும், இது முதல் வாசிப்புக்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்துக்குள் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது.
அரசாங்க உறுப்பினர்கள் குழு நிலையின் போது இதற்கான திருத்தங்களை சமர்ப்பிக்க முடியும்.
மக்கள் கோரும் இந்தத் திருத்தங்கள் ஏன் தாமதப்படுத்தப்படுகின்றன என்று கேட்கிறோம்.
ஜனநாயக உலகின் மரியாதையை வென்றெடுக்கும் பயணத்தை மேற்கொள்வதற்கு இந்த அரசாங்கம் இன்னும் தயக்கம் காட்டுகின்றது. ஜனநாயக உலகில் நமது நாட்டை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
இந்த ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தும் முயற்சிகளை முறியடிப்பதற்காக இந்த மக்கள் சூழ்ச்சிகளை பயன்படுத்தி தமது இருப்பை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதற்குக் கூட அரசுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்துள்ளார்.