முஸ்லிம் வீடுகளை புல்டோசரால் இடிப்பது, ‘மிக வெட்கமின்றி ஒரு குற்றவியல் இந்து பாசிச நிறுவனமாக இந்தியா மாறுகிறது’ என்பதைக் காட்டுகிறது என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுகிறார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் கான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலரின் வீடுகள், ‘புல்டோசர்’ மூலம் இடித்து தள்ளப்பட்டன.
இதனையடுத்து, இதை எதிர்த்து, முஸ்லிம் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, விக்ரம் நாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, உத்தர பிரதேச அரசு, கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ்
மாநகராட்சிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் வாதிட்டதாவது:
சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டதால் தான் இந்த வீடுகள் இடிக்கப்பட்டன. இது தொடர்பாக, 2010 ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளை பின்பற்றித் தான் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.
இப்போது கூட, பாதிக்கப்பட்ட நபர்கள் வழக்கு தொடரவில்லை. முஸ்லிம் அமைப்பு சார்பில் பொதுவான உத்தரவு பிறப்பிக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘அரசு அமைப்புகள், மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும், நியாயமான முறையிலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் அவை இருக்க வேண்டும்’ என, அமர்வு தெரிவித்துள்ளது.
இதனிடையே எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை இந்தியா ஆளும் பிஜேபி மேற்கொள்கின்றது, இந்து பாசிச நிறுவனமாக இந்தியா மாறுகிறது’ எனவும் குறிப்பிட்டு வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்துக்கு எதிராக உலகொங்கிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.