இலங்கைக்கான அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலியா 50 மில்லியன் அமெரிக்க டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இன்று (20) ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இதன்போது, குறித்த அறிக்கையில், ‘இலங்கை தற்போது எழுபது ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, இது உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.
அவுஸ்திரேலியா இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவது மட்டுமன்றி, இந்த நெருக்கடி தொடர்ந்தால் பிராந்தியத்திற்கு ஆழமான விளைவுகளும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள மூன்று மில்லியன் மக்களுக்கு அவர்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு உடனடியாக 22 மில்லியன் டொலர்களை வழங்குவோம்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கான அபிவிருத்தி உதவியாக 23 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இது ஆபத்தில் உள்ளவர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதில் வலுவான முக்கியத்துவத்துடன், சுகாதார சேவைகள் மற்றும் பொருளாதார மீட்புக்கு ஆதரவளிக்கும்.
இந்த நன்கொடைகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக உள்ளன’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.