நாட்டில் அமைதியை நிலைநாட்ட மக்கள் ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ள இத்தருணத்தில்,அமைதியை நிலைநாட்ட முப்படைகளுக்கும், காவல்துறைக்கும் மக்கள் வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்தொகையான சாதாரண மக்கள் இன்றும் கொழும்பு கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்கியுள்ளனர்.
அதேபோல பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
மற்றொரு குழுவினர் கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்திலும், மற்றுமொரு குழுவினர் கோட்டை ஜனாதிபதி செயலக வளாகத்திலும் தங்கியுள்ளனர். மேலும், கோட்டை புகையிரத நிலையத்தில் பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுக்கப்படுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.