பல சிரமங்களுக்கு மத்தியில் ஊழல் மற்றும் வினைத்திறனற்ற ஆட்சிக்கு எதிராக மக்களின் இறையாண்மை நிலைநாட்ட துணிச்சலுடன் போராடிய மக்கள் அனைவரையும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் பாராட்டுகிறது.
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் அனைத்து இலங்கையர்களுக்கும், எமது எதிர்கால சந்ததியினருக்கும் சொந்தமான விலைமதிப்பற்ற பொது வளங்களான ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் இல்லம் மற்றும் அலரிமாளிகை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நிதானத்துடன் செயற்படுமாறு ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் வேண்டுகோள் விடுகிறது.
காலதாமதமின்றி அமைதியான முறையில் அதிகார பரிமாற்றத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நிறுவனம் அழைப்பு விடுக்கிறது.
ஜூலை 9 ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையினை ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் வன்மையாக கண்டிக்கிறது, இதன் விளைவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் இராணுவத்தினர் (படையினர்) பலர் காயமடைந்தனர்.
அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளை சேகரித்த தனியார் ஊடகத்தின் ஏழு ஊடகவியலாளர்கள் மீது பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான மற்றும் கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
இந்த இக்கட்டான தருணத்தில் உரிய அதிகாரிகள் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராகவும் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் பிரதமரின் இல்லத்தின் மீதான தாக்குதலையும் நாம் கண்டிக்கிறோம். இத்தகைய தீங்கிழைக்கும் செயல்கள் மக்களின் வெற்றிக்கு களங்கத்தையே ஏற்படுத்தும்.
இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுமக்களின் தெளிவான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, நேர்மையான தலைமைத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொறுப்பேற்கவிருக்கும் எந்தவொரு வருங்கால நிர்வாகத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் கோரும் உண்மையான மாற்றத்தை உருவாக்க உடனடியாக உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஒரு சிவில் சமூகமாக நாமும் நாட்டு மக்களும் அனைத்து கட்டங்களிலும் பொறுப்புக்கூறும் பிரதிநிதித்துவத்தை அவதானத்துடன் கண்காணித்துக்கொண்டிருப்போம் எனவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.