இலங்கையின் 08வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தனது குறுகிய காலத்தில் ஆற்றிய சேவைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நன்றி செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஆகியவை அவர் முன்கூட்டியே இராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணங்கள் என்று சுட்டிக்காட்டுகிறது.
முப்பது வருடகால பயங்கரமான, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தாய் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்.
ஜனாதிபதியாக பதவியேற்று மூன்று மாதங்களிலேயே தொற்று நெருக்கடி ஏற்பட்டது.
கொவிட் அனர்த்தத்தை இலங்கை ஜனாதிபதி சரியான முறையில் நிர்வகித்துள்ளார் என்பதை சர்வதேச சமூகம் கூட ஏற்றுக்கொண்டுள்ளது.
உங்களைப் போன்ற ஒரு நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றிய உரையாடல் வருங்கால குடிமக்களின் மனசாட்சியில் நிச்சயம் உருவாகும் எனவும் பயங்கரமான போர்க்களத்தில் ஒரு போர் வீரனாகவும், அரச பாதுகாப்புச் செயலாளராகவும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராகவும் உங்களின் சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.