இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக பாராளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
ஜனாதிபதி பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், திரௌபதி முர்முவை வரவேற்றார்.
அதன்பின்னர் திரௌபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்தனர்.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் விழா தொடங்கியது. நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து நாட்டின் குடியரசுத் தலைவராக அவரது முதல் உரையை ஆற்றினார்.
அதில் விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவாரானது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிபலிப்பு நான், அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் பாடுபடுவோம் எனக் கூறினார்.
சாதாரண கவுன்சிலராக தொடங்கி, இந்திய குடியரசுத் தலைவராவது இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம் மற்றும் அதன் சக்தி எனக் கூறினார்.