சமீபத்தில் கிடைக்கப் பெற்ற ஜனநாயக சுதந்திரத்தின் விளைவுகளோடு புதிய மோதல்கள் உருவாகும் சாத்தியங்களும் உள்ளன.
ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி செயலகமும் மக்கள் எழுச்சிப் போராளிகளின் கைகளில் வீழ்ந்த பின்னரும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்கள் அழுத்தத்தை மீறவே முயன்று வந்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அண்மையில் கிடைத்த ஊடக அறிக்கைகளின்படி ராஜபக்சவும் அவரது மனைவியும் ஜூலை 13 அதிகாலையில் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். நாட்டில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய மூத்த உறுப்பினர்கள் வெளியேறிச் செல்வதற்கு காத்து நிற்கின்றனர்.
ஜூலை 9 முதல் ஜூலை 13 வரையிலான காலப்பகுதியல் இடம்பெற்ற நிகழ்வுகள் அசாதாரணமான, வியக்கத்தக்க நிகழ்வுகளாகும். 15 வருடங்களுக்கும் மேலாக இலங்கையை ஆண்ட அரசியல் குடும்பம், இடையறாது இடம்பெற்ற அமைதியான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் மூலம் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டது.
ராஜபக்ச யுகத்துக்கு அடுத்த கட்டம்
தற்போது நிலவிவரும் முன்னேற்றங்கள் இலங்கையில் சர்வாதிகார அரசியலின் புதிய நகர்வுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. இதனை ராஜபக்ஷவுக்குப் பிந்தைய கட்டம் என்று அழைக்கலாம். இந்த புதிய கட்டத்தின் பிராதான அம்சமாக ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பணியே அமைய வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதன் ஊடாக ஜனநாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற பிரமாண்டமான மக்கள் கோரிக்கை எழுந்துள்ளதை நாம் அறிவோம். எந்தவொரு புதிய அரசாங்கம் அமைந்தாலும் அதன் கொள்கை பத்திரத்தில் ஒரு விரிவான அரசியல் சீர்திருத்தப் பொதியின் மூலம் இலங்கையின் மிகவும் வெறுக்கப்படும் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது முதன்மைப்டுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
உண்மையில், மலர்ந்துள்ள புதுயுகத்தில் ஒரு புதிய ஜனாதிபதி, ஒரு புதிய பிரதமர் மற்றும் புதிய அரசாங்கம் என்பன அரசியல் விழிப்புணர்வுள்ள சுறுசுறுப்பான குடிமக்களின் கண்காணிப்பின் கீழ் செயல்பட வேண்டும். இளம் அரசியல் செயற்பாட்டாளர்களான புதிய தலைமுறையினர் பாரம்பரிய அரசியல்வாதிகள் மீதும் இறுக்கமான அரசியல் கலாசாரத்தின் மீது பொறுமை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அத்தகைய புதிய இளம் தலைமுறையினரே இலங்கையின் அரசியல்மயப்பட்ட குடிமக்களுக்கு புதிய திசையை வழகாட்டுபவர்களாக தெரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் ராஜபக்ஷவுக்குப் பிந்தைய இலங்கையில் வழமையான அரசியலுக்கு இடமிருக்காது.
சமீபத்தில் ஏற்பட்ட இரண்டு நிகழ்வுகள் இந்த மாபெரும் மாற்றத்தை எளிதாக்கியது எனலாம். முதலாவது, முன்னெப்போதும் இல்லாத பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உருவாகியமை. அந்த நெருக்கடி சூழலை மென்மேலும் மோசமாக்கும் காரணிகளாக கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் மற்றும் அரசாங்கத்தின் தவறான பொருளாதார நிர்வாகமும் அமைந்தன. கொடூரமான பொருளாதார வீழ்ச்சியினால் துயரம் தரும் பல சமூக அவலங்கள் பரவியது. மறுபக்கம் மின்சாரம், எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தடையில்லாமல் விநியோகிப்பதில் அரசாங்கத்தின் இயலாமையும் தோல்வியும் வெளிப்பட்டது. இதனால் நாட்டு மக்கள் ஜனாதிபதி மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் கடும் கோபமும் வெறுப்பும் கொண்டனர்.
இரண்டாவது, ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் வெடித்தது. கடந்த ஆண்டு முதல் இலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் இடம்பெறுவது வழமையாகிவிட்டது. கையிருப்பில் இருந்த அந்நியச் செலாவணி சடுதியாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இரசாயன உரங்கள் இறக்குமதிக்கும் அரசாங்கம் தடை விதித்தது. அதற்கு எதிராக கிராமப்புறங்களில் மக்கள் எதிர்ப்புப் பேரணிகள் தொடங்கப்பட்டன. இதுவே மக்கள் எழுச்சியின் ஆரம்பமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் சம்பள உயர்வைக் கோரி சென்ற ஆண்டு போராட்டங்களை நடத்தினர். இந்த ஆண்டு மார்ச் மாதமளவில் வளர்ந்து வரும் பயங்கரமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இணைந்து கொண்டனர். மார்ச் 31 அன்று இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் திடீரென ‘கோட்டா கோ ஹோம்’ என்ற பேரணி முழக்கத்துடன் நகர்ப்புற பிரச்சாரமாக வளர்ந்தது.
ஜனநாயக கோரிக்கைகள்.
இன, மத, வர்க்க வேறுபாடுகளின்றி பல்லினங்களையும் பல தலைமுறைகளையும் உள்வாங்கிய சமூக இயக்கம் தான் இலங்கையின் சமகால அரசியல் மாற்றத்தில் மிகவும் சக்திவாய்ந்த மையமாக இருந்தது. உண்மையில் இத்தகைய சமூக இயக்கத்தின் கோரிக்கைகள் தீவிர ஜனநாயக தன்மை கொண்டவை. இந்த மக்கள் இயக்கம் ஆட்சி மாற்றத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பிலும் மாற்றத்தை வலியுறுத்துகிறது. அவ்வாறே அரசியல் மேதாவிகளால் குறிப்பாக ராஜபக்ச சகோதரர்களால் நீண்டகாலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நடைமுறைகளிலும் மற்றும் ஜனநாயக நிறுவனங்களிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என இந்த மக்கள் இயக்கம் விரும்புகிறது.
புதிய மக்கள் இயக்கத்தின் கோரிக்கை வெறுமனே பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மீளுவது மட்டுமல்ல, மாறாக அதிகாரங்களில் சமநிலை பேணும் வலுவான கட்டமைப்பின் மூலம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கூடிய உண்மையான ஜனநாயகத்தை அது எதிர்பார்க்கின்றது. மேலும் அந்தக் கோரிக்கையானது ஊழல் மற்றும் அரசியல் அதிகாரத் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கும் சட்டத்தையும் உள்வாங்கியுள்ளது. அரசியல்வாதிகளாலும் பாராளுமன்றத்தின் தலையீடுகளாலும் மக்கள் ஆணை துஷ்பிரயோகம் செய்யப்படாமலிருப்பதற்காக குடிமக்கள் தடுக்கும் வகையில் நேரடி ஜனநாயக நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பையும் மக்கள் இயக்கம் விரும்புகிறது.
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற அந்த ஆச்சரியமான நிகழ்வுகளுக்குப் பின்னர், இலங்கையின் அரசியலில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. உற்சாகக் களிப்பும் பதகளிப்பும் தவிப்பும் அதற்கான காரணி எனலாம். இந்தக் களிப்புக்கும் பரபரப்புக்கும் காரணம் தோற்கடிக்கப்படமாட்டோம் என்று நினைத்து வாழ்ந்த ஒரு ஆளும் அதிகார கும்பலை அமைதியான மக்கள் எழுச்சியொன்றினால் அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்தது மட்டுமல்ல ஜனநாயகத்தை மீட்டிக் கொண்டுவருவதற்கும் அரசியலை பரிசுத்தப்படுத்துவதற்கும் இப்போது பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளமையுமாகும். அதன் முதன்மை ஆசிரியர்கள் அரசியல் மேதாதவிகள் அல்ல, மாறாக சாதாரண குடிமக்களாகும். குடிமக்களின் அiதியான கருத்துவேறுபாடுகளிலும் மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வழிமுறைகளிலும் ஜனநாயகமயமாக்கலின் விதைகள் முளைத்துள்ளன. தேசநலனுக்காக எதிர்ப்பை காட்டும் குடிமக்களின் எழச்சியானது எதிர்பார்க்கப்படும் சமகால ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கலாம்.
இலங்கை மக்கள் விரும்பும் ஜனநாயக சீர்திருத்தத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதவற்குரிய திறனும் தகுதியும் தற்போதுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு உள்ளதா என்பதில் பயமும் பதகளிப்பும் உள்ளது. மக்கள் எழுச்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அடக்குமுறை சர்வாதிகாரத்திலிருந்து பிந்தைய் நவதாராளமய ஜனநாயகத்தை நோக்கி துரித மாற்றத்திற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான இயலுமை, திறன் என்பன அரசியல் கட்சிகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் மற்றும் பிளவுபட்ட அரசியல் குழுக்களுக்கும் உள்ளனவா என்பதில் கடுமையான சந்தேகங்கள் உள்ளன.
சாத்தியமான மாற்றங்கள்.
எனவே, எதிர்வரும் வாரங்களிலும் மாதங்களிலும் இலங்கை மண் புதிதாக ஈன்றெடுத்த ஜனநாயக சுதந்திரத்திற்கு, பேராபத்தை தரக்கூடிய இரண்டு புதிய முரண்பாடுகள் தலைதூக்கலாம்.
முதலாவது, எழுச்சிப் போராளிகளின் தீவிரப் பிரிவினருக்கும் பாரம்பரிய, பழமைவாத மற்றும் மக்கள் எழுச்சியின் நிகழ்ச்சி நிரலில் சந்தேகம் கொண்டுள்ள பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான துருவமுனைப்பு ஆகும். ஆளும் குடும்பத்தை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் ராஜபக்சக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான முரண்பாடு தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டிருந்தாலும் அடுத்து வரும் அரசாங்கத்தை நடத்துவதற்கான நம்பகமான திட்டத்தை உருவாக்குவதற்கான பந்து பாராளுமன்ற எதிர்க்கட்சியின் ஆடுகளத்திலேயே உள்ளது. ஏவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதி யார் என்ற உடனடி கேள்வியை மையமாகக் கொண்டு பல்வேறு கட்சிகளிடையே உட்பூசல்கள் ஏற்கனவே தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நிலையானது நிச்சயமாக மீண்டும் ஒருமுறை பின்னறை ரகசிய ஒப்பந்தங்களுக்கும், ஊழல்வாதிகளின் கொள்கையற்ற கூட்டணிகளுக்கும் கதவுகளைத் திறந்து கொடுக்கும்.
இத்தகைய சந்தேக மேகங்கள் படர்ந்துள்ள நிச்சயமற்ற அரசியல் தன்மை காரணமாக இரண்டாவது முரண்பாட்டிற்கு வழிபிறக்கலாம். ராஜபக்சேக்களின் கட்சியான பொதுஜன பெரமுனாவின் எம்.பி.க்கள் பிரதமர் ரணிலுக்கு வலுவாக ஆதரவளிப்பதால் அவர் புதிய ஜனாதிபியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் திடீரென ரணில் விக்கிரமசிங்ஹ, ராஜபக்ச குடும்பத்தின் நலன்களை காக்கும் தீவிர பாதுகாவலராக தன்னை மீண்டும் ஆக்கிக் கொண்டுள்ளார். எனவே வேறு பெயர்களில் ராஜபக்சவின் ஆட்சியை தொடரும் தந்ரோபயமானது எழுச்சிப் போராளகளுக்கும் (அரகலயாவிற்கும்) உதயமாகும் புதிய அரசாங்கத்திற்கும் இடையில் இரண்டாம் கட்ட மோதல் வெடிப்பதற்கான வாய்ப்பு நிலவுகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையானது இரண்டு போட்டியிடும் அரசியல் அதிகார மையங்களுக்கிடையில் ஒரு வெளிப்படையான மோதல் தோன்றுவதை கட்டியம் கூறுகிறது. ஒன்று பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியையும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தரப்பு மற்றொன்று கொழும்பின் காலி முகத்திடலில் அமைந்துள்ள அரகலய எழச்சிப் போராளிகள். மோதலின் இந்தப் புதிய கட்டம் பெரும்பாலும் அரசியல் அதிகாரப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதை நோக்கியே நகரும். அரசியல் அதிகாரம் என்பது எப்போதும் அமைதி வழியில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினை என்பதே வரலாறு நமக்குச் சொல்லித் தரும் பாடமாகும்.
மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட (Jayadeva Uyangoda) – ஓய்வுபெற்ற கொழும்பு பல்கலைகழக அரசியல் விஞ்ஞான துறை பேராசிரியர்.
தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன்