எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் குழு கலந்துகொண்டனர்.
நாட்டில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பிலும் அதற்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இவர்கள் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அங்கு பேசிய எதிர்க்கட்சித் தலைவர், கடந்த 3 வருடங்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல், தாங்கள்தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டுள்ளனர்.
அதிலிருந்து விடுபட அனைவரும் ஒன்றிணைந்து சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வாதிகாரம் இன்றி அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவே முற்போக்கு கட்சிகளின் முன்மொழிவுகளுக்கும் யோசனைகளுக்கும் செவிசாய்க்கப்படும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.
பன்முகத்தன்மை கொண்ட சிந்தனைகளை ஒன்றிணைக்கும் பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்புவதும், அந்த நிகழ்ச்சி நிரலின் ஊடாக நாட்டு மக்களின் இழந்தவற்றை மீண்டும் வழங்குவதும் எதிர்க்கட்சிகளின் நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய மறுசீரமைப்பு மற்றும் முன்னோக்கிய பயணம் வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்தார்.
அதேவேளை நாட்டை வலுவாகக் கட்டியெழுப்புவதற்கு முன்னர் இல்லாத அரசியலமைப்பு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நாட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்தரி தெரிவித்தார்.
ஜப்பான் போன்ற நட்பு நாடுகள் இலங்கையில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும் அதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு என்றும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும், இளைஞர் சமூகமும் ஜனநாயக ரீதியில் நாட்டைப் பற்றி சிந்திப்பதால், தமது கனவுகளை நனவாக்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.