சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் இதற்காக அழைப்பார் என்றும் அவர் கூறினார்.
கண்டிக்கு இன்று (ஜூலை 31) வருகை தந்த பிரதமர், தலதா மாளிகையில் வழிபாடு செய்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைவரையும் அழைக்கிறேன் என்றார்.
நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் நட்புறவுடனும் நம்பிக்கையுடனும் செயற்படுவதால், சகல தரப்பினரின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தூதுவர்கள் உள்ளிட்ட சர்வதேச உறவுகளுக்கு அறிவித்து ஆதரவைப் பெறும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதியும் தானும் ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் அனைத்து மக்களினதும் நலனுக்காக சட்டம் ஒழுங்கை அமுல்படுத்துவதுடன் நாட்டிற்கான ஆட்சியையும் நடைமுறைப்படுத்துவதற்காக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் மட்டுமல்ல தனியார் துறையின் செயற்பாடும் நாட்டின் உயிர்நாடியாக இருப்பதால் சட்டத்திற்கு புறம்பாக நாசகார செயற்பாடுகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில், தலைவணங்கி நீதிமன்றத் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்வதுடன், தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எவரும் உணர்ந்தால் நீதிமன்றத்தை நாடுவதற்கான உரிமையை மதிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.