ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக் கோரி இன்று (ஜூலை 9) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியில் இருந்து மக்கள் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து சிரமங்கள் இருந்தபோதிலும் மக்கள் கொழும்புக்கு வருகைத்தருகின்றார்கள்.
காலி முகத்துவாரம், லேக் ஹவுஸ் சுற்றுவட்டம், எல்பிஸ்டன் திரையரங்கிற்கு அருகில் உள்ள பகுதிகளில் மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (ஜூலை 8) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து களனிப் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் போராட்டத்தை ஆரம்பித்து காலி முகத்துவாரப் பகுதிக்கு பேரணியாகச் சென்றது.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதிகளிலும் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மலையகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள கடைகளை அடைக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது ஹட்டன் செய்தியாளர் தெரிவித்தார்.