‘தனது வெற்றிக்கு சிங்களவர்களே காரணம்’: கோட்டாவை நாட்டை விட்டே விரட்டிய மறைவான சக்தி

Date:

உலகில் வாழ்ந்த கொடியவர்கள் மற்றும் அநியாயம் செய்து வந்த சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் விவரிப்பதைக் நாம் காணலாம்.

ஒரு வேளை, அரேபியாவிற்கு பதிலாக இலங்கையில் திருகுர்ஆன் இறக்கப்பட்டிருந்தால், மோசமான ஆட்சி மற்றும் இனவாதம் கொண்ட தலைவனின் அழிவிற்கு எடுத்துக்காட்டாக கோட்டாபயவின் கதையும் அதில் உட்பட்டிருக்கலாம்.

இப்பிரபஞ்சத்திற்குப் பொதுவான நில நியதிகளை மீறும் போது ஏற்படும் முடிவு பற்றிய உதாரணத்திற்கு கோட்டாவின் வரலாறு மிகப் பொருத்தமானதாக உள்ளது.

இனவாதத்தால் போதையேற்றப்பட்டு வழி கெடுக்கப்பட்ட சிங்கள இனத்தின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஆட்சியை கைப்பற்றிய கோட்டாவிற்கு அரசியலின் அரிச்சுவடிக் கூட தெரியாது என்பதை முழு உலகமும் அறியும்.

நாம் இன்று காணும் பொருளாதார வீழ்ச்சி உட்பட்ட நாடளாவிய அல்லோல கல்லோல குழப்ப நிலைக்கு கோட்டாவின் விவேகமற்ற ஆட்சியே காரணமாகும்.

ஓரளவு நல்ல நிலையில் இருந்ததொரு வளமான நாட்டை இரண்டே வருடங்களில் கோட்டா கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டு நாட்டை விட்டே ஓடி விட்டுள்ளார்.

திவாலான நாடென முழு உலகத்தாலும் இகழப்பட்டு நாம் இன்று செய்வதறியாது தவிக்கின்றோம்.

இதற்கு முன் இலங்கையை ஆட்சி செய்த எந்தவொரு தலைவனும் நிலை நாட்டாத இரண்டு சாதனைகளை கோட்டா நிலைநாட்டியுள்ளார்.

ஒரு கிராம அதிகாரியின் அனுபவம் கூட இல்லாமல் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆனது முதல் சாதனை.

வியூகம் ஒன்றை இடுவதற்கு சாதூரியமாக பின் வாங்கும் ஒரு நபராக இன்றி, இனி இந்த நாட்டிற்கு எப்போதும் திரும்பி வராத முடிவுடன் நாட்டை விட்டு ஓடியமை இரண்டாவது சாதனையாகும்.

கோட்டாபயவின் அரசியல் பிரவேசமானது சிங்களவர் பலருடைய நடுத்தரமாக சிந்தித்துப் பார்க்கும் ஆற்றலை செயலிழக்கச் செய்தது எனில் அது மிகையாகாது.

மனித நேயம், கருனை பற்றி போதிக்கும் ஒரு மதத்தை கடைபிடிப்பவர்கள் ஒரே இரவில் வன்முறையை கையிலெடுத்ததொரு காட்டுமிராண்டி கூட்டமானார்கள்.

ஜனாதிபதி போட்டியில் கோட்டா வெற்றி பெற்ற நாட்களில் சிங்களவர் மத்தியிலே ஒரு வித வெற்றியின் ஆணவம் தென்பட்டது. அதில் இனவாதத்தின் போதையும் காணப்பட்டது.

இந்த மனப்பாங்கு ஒரு தேசத்திற்கு –குறிப்பாக தன்னுடைய இருப்பிற்கு வெளி உலகின் உதவி தேவைப்படும் ஒரு தேசத்திற்கு- மிக ஆபத்தானதாக இருந்தது. அது இன்று நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமோஃபோபியா எனப்படும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்பட்ட அச்சத்தை இனவாதம் எனும் கொடிய விஷத்துடன் கலந்து புகட்டப்பட்ட பெரும்பான்யை இனத்திலிருந்து 69 இலட்சம் ஏமாளி வாக்காளர்கள் ‘நிறைவேற்று அதிகாரம்’ எனப்படும் சவரக் கத்தியை கோட்டாவின் கையில் திணித்தனர்.

அதன் பின் சில நாட்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கோட்டாவின் மொட்டுக் கட்சிக்கு கிடைத்தது.

இந்த மகத்தான வெற்றிகள் பெரும்பான்மை இனத்திற்கு இனவாதத்தின் போதையை தலை உச்சிக்கே ஏற்றி விட்டது எனலாம்.

கோட்டாவை அரியனையில் அமர்த்த அரசியல் மேடைகளில் கூக்குரலிட்டவர்கள் அவரை பரம ஏழை நாடான சிங்கப்பூரை சில தசாப்தங்களிலேயே உலகின் முதன்மை செல்வந்த நாடாக மாற்றிய ஒப்பற்ற தலைவர் லீ குவான் யூவிட்டு ஒப்பிட்டனர்.

அத்துடன் நில்லாமல் கோட்டாவின் சகோதரனான ராஜபக்ஷவை மலேசியாவை செதுக்கிய சிற்பி மஹதிர் மொஹமட் அவர்களுக்கு ஒப்பிட்டனர். இதை கேட்டு முழு உலகமும் சிரித்தமை ஒரு தனிக்கதை.

ஆனால் லீயும் மஹதிரும் தமது தேசங்களை கட்டியெழுப்ப தன்னலமற்று உறுதி பூண்ட போது அவர்கள் தேசப்பற்றுமிக்க இளைஞர்களாக இருந்தமையையும், ஊழலும் இனவாதமும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசியல் கத்துக்குட்டி கோட்டா ஒரு 70 வயது தாத்தா என்பதையும் மேடைகளில் கோஷமிட்டவர்கள் இருட்டடிப்ப செய்து விட்டார்கள்.

லீயும் மஹதிரும் தமது நாடுகளை உலக அரங்கத்தில் உயர்த்தி வைத்திருக்கும் அதே வேளையில், நன்றாக இருந்த ஒரு நாட்டை இரண்டே வருடங்களில் பிச்சைக்கார நாடாக மாற்றிய கோட்டாவோ நாட்டை விட்டே ஓடியுள்ளார்.

திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது: ‘தன்னை தேவையற்றவன் என எண்ணும் போது நிச்சயமாக மனிதன் எல்லை மீறுபவனே’ -சூரா அல் அலக் 6,7

தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பாடும் புகழாரத்தால் மேலும் மயங்கிய கோட்டா, தேர்தல் வாக்குறுதி ஒன்றான வியத் மக கோட்பாட்டின் படி செயற்பட ஆரம்பித்தார்

வரலாற்று முக்கியத்துவம் உள்ள ருவான்வெலி சேய பௌத்த ஆலயத்தின் முன்னிலையில் ஜனாதிபதியாக கடமைகளை ஏற்று தனது கன்னி உரையை ஆற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தனது வெற்றிக்கு சிங்கள பௌத்த வாக்காளர்களே காரணம் என்றும் அதற்கமைய அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே தனது முதன்மையான கடமை எனவும் கூறி தனது இனவாத முகத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் இற்கு முன் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசியல் தலைவரும் வெளிப்படையாக காலடி எடுத்து வைக்க நினைக்காத ஆபத்தான ஒரு நிலப்பரப்பில் கோட்டா காலடியெடுத்து வைத்தார்.

அதன்படியே கோட்டா தனது அழிவுக்கான முதல் அடியையும் வைத்தார். அவரைச் சுற்றியிருந்த வியத் மக ஆமாசாமிகள் விவேகமற்ற திட்டங்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.

இதில் மிகவும் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால், அந்தக் குழுவில் படித்தவர்கள் என்று கூறப்பட்டவர்களும் இருந்தமையே.

இதற்கிடையில் தமக்கு அதிகாரம் கிடைப்பதற்கு முக்கிய காரணமாகிய முஸ்லிம் வெறுப்பை மேலும் போஷிப்பதற்கும் கோட்டா தொடர்ந்து செயற்பட்டு வந்தார்.

அதனடிப்படையில், மலட்டுத் தனத்தை ஏற்படுத்தும் உள் ஆடைகள், கொத்து ரொட்டி ஆகியவற்றை முஸ்லிம் கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் முஸ்லிம் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என பிரசாரம் செய்யப்பட்டது.

ஒரு பிரபல முஸ்லிம் மருத்துவர் தன்னிடம் வரும் சிங்களப் பெண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சையை செய்கின்றனார் என குற்றம் சாட்டி அவரை அரச சேவையில் இருந்து நீக்கி சொல்லொனா கஷ்டங்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டன.

இவற்றை பார்த்து முழு உலகமும் சிரித்தாலும் சிங்களவர்களை ஏமாற்ற இதை கோட்டாவிற்கு போதுமான இருந்தது.

உலகின் மிக முன்னேறிய நாடுகள் கூட பத்து சத வீதத்தை விட அதிகமாக அனுமதிக்காத இயற்கை உரமிட்ட விவசாய முறைமைக்கு முழு நாடும் உடனடியாக மாற வேண்டும் என கோட்டா எடுத்த முடிவானது அவரை போற்றி வந்த மக்களே அவரை தூற்ற காரணமாகியது.

இதன் காரணமாக தேயிலை, நெல் உட்பட்ட முக்கிய விவசாய உற்பத்திகள் பெருமளவு வீழ்ச்சி அடைந்து பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது.

எந்த வித விஞ்ஞான பூர்வ அடிப்படை இன்றியும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை புறக்கனித்தும், கோவிட் காரணமாக மரணம் அடையும் முஸ்லிம்களின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்ய கோட்டா நடவடிக்கை எடுத்தமை உலகத்தின் அதிருப்தி கோட்டா மீது அதிகரிக்கக் காரணமாகியது.

குறிப்பாக நம் நாட்டினர் பல இலட்சம் பேருக்கு வேவை வாய்ப்பு வழங்குவதன் மூலம் இலங்கைக்கு மிக அதிகளவு அந்நிய செலாவனி வருமானம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கி வரும் மத்திய கிழக்கு அரபு நாடுகள் உட்பட்ட உலகம் முழுதும் உள்ள முஸ்லிம் நாடுகள் இவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாத கோட்டா தனக்கு வாக்களித்த சிங்கள இனத்தின் அமானுஷ்ய சந்தோஷத்திற்காக தொடரந்து முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்து வந்தமையே கோட்டாவின் அழிவிற்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.

முஸ்லிம்களை நோவிப்பதை இத்துடன் கோட்டா நிறுத்தி விடவில்லை. பலதார மணம், இளம் வயதில் திருமணம் செய்தல் போன்ற அனுமதிகள் முஸ்லிம்களுக்கு இருப்பதே முஸ்லிம் இகனப்பெருக்கத்திற்குக் காரணம் என இனைவாதிகள் கருத்துச் சொல்ல, அந்த அனுமதிகளை ஒழிக்கும் நோக்கத்துடன் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்குவதை தனது முழு நேர உத்தியோகமாக கொண்டுள்ள ஞானசார தேரரின் தலைமைத்துவத்தில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு செயலணியை கோட்டா அமைத்தார்.

தேசத்தை அபிவிருத்தி செய்வதை விட்டு விட்டு இது போன்று தூர நோக்கற்ற மற்றும் தேவையற்ற பல மடத்தனமான வேளைகளில் கோட்டா ஈடுபட ஆரம்பித்ததால் உள்ளூர் வெளியூர் அதிருப்திகள் அதிகமாகி, வருமானம் வீழ்ச்சி அடைந்து நாட்டில் வறுமையும் நெருக்கடியும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் தலை தூக்க ஆரம்பித்தன.

இன்னோரன்ன அறிவிற்கு பொருந்தாத, தூரநோக்கற்ற மற்றும் இனவாத அடிப்படை நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக கோட்டாவின் செல்வாக்கு போன்றே நாட்டின் பொருளாதாரம், ஒழுங்கு, நீதியின் ஆளுகை என்பனவும் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தன.

எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களினது விலைகள் நாளுக்கு நாள் வானை நோக்கி எகிரத் துவங்கின. விலை உயர்வது மட்டுமன்றி எந்த விலைக்கும் எரிபொருள் போன்ற சில அத்தியாவசிய பொருட்களை பெறவே முடியாத நிலையும் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது.

இதன் காரணமாக கோட்டாவிற்கு  வாக்களித்த 69 இலட்சத்தின் பொறுமையும் அதன் எல்லையை அண்மிக்க ஆரம்பித்தது.

சந்தரப்பவாதிகள், இனவாதம் போதிக்கும் மதகுருமார்கள் மற்றும் அறிவற்ற அறிஞர்களின் ஆலோசனைகளை பெறுவதன் பாரிய விளைவு நாடெங்கிலும் தென்படத் துவங்கியது.

இதற்கு கோட்டா அளித்த பதில் தான் பதவி ஏற்றது பெட்ரோல், கேஸ் போன்றவற்றை பற்றி அலட்டிக் கொள்வதற்கு அல்ல என்பதே. கோட்டா இவ்வாறு கூறும் போதே பலர் எரிபொருள் வரிசைகளில் மாண்டு விழவும் ஆரம்பித்தனர்.

நாட்டின் மோசமான நிலையால் விரக்தியுற்று வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் பாஸ்போர்ட வரிசையில் காத்திருந்த ஒரு மாது ஒரு பிள்ளையையும் அவ்விடத்திலேயே பெற்றெடுத்தாள். ஆனால் கோட்டா இவை எதனையும் கண்டுகொள்ளவில்லை.

தன் முன் வைக்கப்படும் ஆலோசனைகளை நன்றாக மீளாய்வு செய்ததன் பின்னரும் பல துறைசார் நிபுணர்களிடம் கருத்துக்களை பெறுவதன் பின்பே அவ்றை நடைமுறைப் படுத்துவதே உலகில் தலைசிறந்த அரசியல் தலைவர்களின் பண்பாகும். ஆனால் அந்த விவேக மிகு பண்பு கோட்டாவிடம் இருக்கவில்லை.

சில காலம் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாவிற்கு இராணுவப் பின்னணி ஒன்று இருந்ததால் அவருடைய பெயரை கேட்டவுடன் அவருடைய எதிரிகளும் அவரை விமர்சித்தவர்களும் கதிகலங்கி போவதுண்டு.

ஆனால், உண்மையில் கோட்டா அவ்வாறு பயப்பட வேண்டிய ஒரு கெரக்டர் அல்ல என்ற விடயம் இப்போது தெளிவாகியுள்ளது.

‘கோட்டா கோ ஹோம்’ போராளிகளை காலி முகத்திடலில் இருந்து விரட்டாமை மற்றும் கோட்டா கடைசியாக பாராளுமன்றம் வந்தபோது எதிர்கட்சியினர் அவருடைய வருகையை எதிர்த்து கோஷமிட்ட போது ஒரு அசட்டு புன்னகையுடன் அவர் அங்கிருந்து எழுந்து வெளியே சென்றமையும் இதற்கான இரு உதாரணங்களாகும்.

இறைவனின் துணை இல்லாதபோது தான்தோன்றித்தனமாக செயற்படும் மனிதன் குழப்பத்திற்கு ஆளாவது இயல்பே.

தன்னுடைய இலக்கை அடைய அவன் கண்களை மூடியவாறு செயற்பட ஆரபித்து கவகு விரைவிலேயே தன்னுடைய அழிவை வரவழைத்துக் கொள்வான். திருமறை இது பற்றி இவ்வாறு கூறுகின்றது:

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு  இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான்.

எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? -23 சூரா அல் ஜாதியா

ஒரு தீயனவனுக்கு அளவிற்கு அதிகமான அதிகாரம் கிடைக்கும் போது அவனாலும் அவனைச் சுற்றியுள்ளவர்களாலும் ஊழலும் மோசடியும் எல்லை மீறுவதுண்டு.

அடக்குமுறையால் சகலவற்றையும் சமாளிக்கலாம் என அவர்கள் நம்புவார்கள்.

தம்மை எதிர்ப்பவர்களை கொன்று விடுவதாக அச்சுறுத்துவார்கள் அல்லது கொன்றே விடுவார்கள் அல்லது காணாமலாக்கி விடுவார்கள்.

ஆட்சியில் இருப்பவர்கள் மோசடிக்காரர்காளக இருக்கும் போது நீதியின் ஆளுகையும் வீழ்ந்து விடும்.

ஆனால், அன்றாட வாழ்வே ஒரு மாபெரும் போராட்டமாகிவிடும் போது நாடளாவிய விதத்தில் மக்கள் எழுச்சியொன்று ஆரம்பாவது உலக நியதியாகும்.

பயம் என்றால் என்ன என்றே அப்போது மக்கள் அறிய மாட்டார்கள். ஆயுதபாணியான இராணுவத்தையும் எதிர்க்க மக்கள் துணிந்து விடுவார்கள். இது உலக வரலாற்றில் பல தடவை நடந்துள்ளது.

இதையே நாம் கடந்த நாட்களில் இலங்கையிலும் கண்டோம். இறுதியில் தான் எரித்த தீக்கு தானே பலியானர் கோட்டா.

இறைவன் மனிதனுக்கு ஒருபோதும் அநியாயம் செய்வதில்லை. மனிதனே தனக்கு அநியாயம் இழைத்துக் கொண்டு இறுதியில் அழிவைத் தேடிக்கொள்கின்றான.

இது திருக் குர்ஆன் வலியுறுத்தும் மாபெரும் சத்தியமாகும். ஏனைய மதங்களின் அடிப்படையும் இதுவே.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...