அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக தேர்தலின் போது தமது வாக்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்திலே இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி வாக்கெடுப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதை புகைப்படம் எடுத்தால் 7 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல விதிகளையும் கடைப்பிடித்து ஜனநாயகத்தை மதித்து ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாளை (20) நடைபெறவுள்ள வாக்கெடுப்பை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
உரிய சட்ட கட்டமைப்பிற்குள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் செயற்பாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இதுவரையில் வழங்கிய ஆதரவை பாராட்டுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் தேர்தல் அதிகாரியான பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாளை (20) மீண்டும் 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.