பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும், போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெதும் கெர்னர் இன்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், தாம் சுகயீனமுற்றிருப்பதாக சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை சமர்ப்பித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் தங்கியிருந்து பல்வேறு வழிகளில் மக்களை அந்த இடத்திற்கு வருமாறு தெரிவித்தும், பாராளுமன்ற பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வீதித் தடைகளை உடைக்கும் பணியில் மக்களை வழிநடத்திச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு, எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினரில் இருந்த இரண்டு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர்.
மேலும் தீவிரவாதிகள் அவர்களிடமிருந்து T-56 துப்பாக்கிகள் மற்றும் உயிருள்ள வெடிமருந்துகள் அடங்கிய பொதிகளையும் கடத்திச் சென்றனர்.
மீகவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் என கூறப்படும் பெதும் கெர்னருக்கு எதிராக நீதிமன்றில் இருந்து பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.