மொரோக்கோ மன்னருக்கு என்னவாயிற்று? சமூக அமைதியின்மையால் கொந்தளிக்கும் தேசம்!

Date:

-லத்தீப் பாரூக்

வட ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் மத்திய தரைக் கடல் பிரதேசம் என்பனவற்றை அண்மிய ஒரு தேசம் தான் மொரோக்கோ.

மிகவும் தொண்மையான நீண்ட வரலாறு உடைய நாடு. செழிப்பான கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மை கொண்ட சமையல் கலைக்கும் பேர் போன நாடு.

இங்கு 99 வீதமான மக்கள் முஸ்லிம்கள். எஞ்சிய ஒரு சத வீத மக்கள் கிறிஸ்தவர்கள்.

ஒரு காலத்தில் பிரான்ஸின் காலணித்துவ ஆதிக்கத்தின் கீழ் இருந்த மொரோக்காவில் இன்று வரை அவர்களால் நியமிக்கப்பட்ட அரச பரம்பரை தான் ஆட்சியில் உள்ளது.

மொரோக்கோவின் மன்னர் அந்த மாளிகையிலேயே பிறந்து வளர்ந்தவர். சாதாரண பொது மக்களோடு எந்தத் தொடர்பும் அற்றவர். ஆட்சி அதிகாரத்தின் மீது பூரண கட்டுப்பாடு கொண்டிருந்தவர்.

ஆனால் இந்த அடக்குமுறை ஆட்சியின் கீழ் சிக்குண்ட மக்கள் வறுமை மற்றும் கல்வி அறிவின்மை என்பனவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2011ல் ஏற்பட்ட எதிர்ப்புக்களின் பின் மெரோக்கோ மன்னர் புதிய அரசியல் யாப்பொன்றுக்கு இடமளித்தார். இதன் மூலம் அவரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. வாக்காளர்களும் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் இந்த மாற்றங்கள் தாங்கள் எதிர்ப்பார்த்தபடி அமுல் செய்யப்படவில்லை என்றும் மன்னர் இன்னமும் பல அதிகாரங்களை தன்வசம் கொண்டுள்ளார் என்றும் மக்கள் தரப்பில் இருந்து விமர்சனங்களும் கண்டனங்களுத் எழுந்தன.

அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய கூட்டு அதிகாரவர்க்கத்தின் கைக் கூலியாக 21ம் நூற்றாண்டில் இன்னமும் நிலைத்திருக்கும் அரச பரம்பரைகளில் ஒன்றான மெரோக்கோ, இந்தப் பிராந்தியங்களில் பல ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட 2011 அரபு வசன்த எழுச்சியின் பின்னரும் மாற்றம் காணாமல் நிலைத்திருக்கும் ஒரு சில அரபு மற்றும் முஸ்லிம் நாட்டு அரசுகளில் ஒன்றாகும்.

எவ்வாறேனும் மொரோக்கோவின் சிறிய மீனவ நகரங்களில் ஒன்றில் மீனவர் ஒருவர் மோசமான முறையில் கொல்லப்பட்டதை அடுத்து 2016ல் தேசிய மட்டத்தில் கலவரங்கள் தலைதூக்கின.

இந்த சம்பவத்துக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தப் போராட்டம் விரிவடைந்து அரசியல் ரீதியான மோசடிகள், நிதி ரீதியான ஊழல்கள் என பல்வேறு விடயங்கள் பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றின் நடுவே 2011ல் ஏற்பட்ட அரபு வசன்த எழுச்சியின் தாக்கமும் மொரோக்கோவில் கிளைவிடத் தொடங்கியது. உண்மையில் இந்தப் போராட்டங்கள் என்பது பொருளாதார ரீதியான புறக்கணிப்பு, சமூக மற்றும் சலாசார உரிமைகளின் மறுப்பு என்பனவற்றின் விளைவாக பல தசாப்தங்களாக இந்தப் பிராந்தியத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்திய ஒரு நீண்ட கால நெருக்கடியாகும் என்று அரசியல் ஆய்வாளர் அரஸ்கி தாவூத் கூறுகின்றார்.

ஊழல் முதல் வேலையில்லாப் பிரச்சினையின் பின்னடைவு வரை எல்லாவிதமான சமூக நோய்களும் துஷ்பிரயோகங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையாளப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இந்த எதிர்க்கருத்துக்களில் அவதானமாகக் கவனம் செலுத்திய மொரோக்கோ அதிகாரிகள் அதை இரும்புக் கரம் கொண்டு நசுக்கவும் செய்தனர்.

மொரோக்கோவில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற பிராந்தியம் வெளிப்படையாக மிகவும் இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு பிராந்தியம்.

ஏனைய பிராந்தியங்களுக்கு காலவரங்கள் பரவி விடாமல் தடுப்பதில் மொரோக்கோ அதிகாரிகள் மிகவும் கவனமாகச் செயற்பட்டதோடு இந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸாரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தாவுத் மேலும் விவரித்துள்ளார்.

அண்மையில் பத்தி எழுத்தாளர் அஸிஸ் சாபிர் எழுதி உள்ள ஒரு ஆக்கத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்டத் தீக்கு சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் எரிபொருளாக அமைந்துள்ளன. ஆட்சியாளர்களின் ஊழல்கள் நாளுக்கு நாள் பல்கிப் பெருகும் ஒன்றாக மாறி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொகையான மொரோக்கோ மக்கள் ஓரம் கட்டப்படுவதும் அதிகரித்துள்ளது. வாழ்க்கையின் எல்லா ஆடம்பரத்தையும் அனுபவிக்கும் அரச தரப்பின் ஒரு பிரிவால் இந்த மக்கள் ஓரம் கட்டப்படுகின்றனர்.

சாதாரண மக்களின் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அரசின் பிரசார இயந்திரத்தை வலுவூட்டுவதைத் தவிர சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் எந்தவொரு எண்ணமும் இவர்களிடம் கிடையாது. அதற்காக ஒரு விரலைக் கூட அவர்கள் உயர்த்தவில்லை.

இதேவேளை அரச குடும்பத்தின் நிதி நெருக்கடிப் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே சென்றது. பண்டோரா பத்திரங்களிலும் அவை அண்மையில் பிரதி பலித்தன.

யதார்த்த நிலையோடு முற்றிலும் எந்தத் தொடர்பும் அற்ற அரசியல் ஒழுங்கு முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பல்வேறு குழுக்களும் ஒன்று திரண்டன.

நாட்டில் எதிர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு விதங்களில் அதிகரித்ததும், அரசுக்கு எதிரான கொந்தளிப்பு நிலையும் பெருகத் தொடங்கியது அதிகார வர்க்கத்தின் கவனத்தை ஈர்த்தது. ஒடுக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் தமது முயற்சிகளில் தனியாக இல்லை.

ஓட்டு மொத்த மொரோக்கோ சமூகமும் எந்த வித்தியாசமும் இன்றி அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியது. இதை புரிந்து கொண்ட அரசு மக்கள் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது.

கிராமப் புறங்களில் இருந்தும் அரசுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. றுபாத், கஸப்லங்கா, டேன்ஜயர், மராகே போன்ற பிரதான இடங்களில் இருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன.

மொரோக்கோ மன்னர் தனது நாட்டு கைத்தொழில் துறையினரோடும் வர்த்தகத் தலைவர்களோடும் ஒரு போதும் தொடர்புகளை துண்டித்தது கிடையாது.

அந்த நாட்டின் பிரபலமான வர்த்தகப் பிரமுகரும் அரச மாளிகை வட்டாரத்துக்கு மிகவும் நெருக்கமானவருமான அஸீஸ் அக்கனோச் என்பவரை மன்னர் பிரதமராகவும் நியமித்தார்.

கட்சி முறைமையை மாளிகை வட்டாரம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் செயற்பாடு அதிகரிப்பதை இது கோடிட்டுக் காட்டியது. இதனால் மொரோக்கோவில் ஜனநாயம் தொடர்பான உண்மையான சீர்திருத்தத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாத நிலை ஏற்பட்டது.

புதிய அரசு பதவியேற்றது முதல் மௌனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட மொரோக்கோ மக்களிடம் இருந்து நாளாந்தம் பல்வேறு கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆனால் அரசு அவை எதற்கும் செவி சாய்க்காமல் ஆழ்ந்த மௌனம் காத்தது.

அதிகரித்து வந்த நிதி நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி என்பனவற்றில் கவனம் செலுத்த மன்னர் காட்டி வந்த தொடர் தயக்கம் காரணமாக ஊழல் மிக்க வர்த்தக சமூகத்திடமும் அதிகார துஷ்பிரயோகம் மிக்க அரசியல் மேல் மட்டத்திடமும் நாடு சிக்கி விட்டது என்ற மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

பொறுப்பற்ற ஒரு நிர்வாகத்தின் தோல்வியை பிரதிபலிப்பதாக இது அமைந்தது. ஆனால் நிர்வாகத்தில் இருந்தவர்கள் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு முறைகேடாக செல்வத்தை குவித்து கிடைக்கின்ற ஆடம்பரங்கள் அனைத்தையும் அனுபவித்து வந்தனர்.

மறுபுறத்தில் பெரும்பாலான மொரோக்கோ மக்களின் வாழ்வாதாரமும் வருமானமும் பாதிக்கப்பட்டு கொள்வனவு சக்தியும் நிலை குலையத் தொடங்கியது. நாளுக்கு நாள் இந்த நிலை சோமடையத் தொடங்கியது.

அரச தரப்பு இந்த விடயங்களில் கவனம் செலுத்த தேவையற்ற ஒரு தரப்பு போல் நடந்து கொண்டது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கான எந்தத் திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை. மன்னர் தரப்பு வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்க்கும் தரப்பாக மாறியது.

மொரோக்கோவில் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணத் துறையை ஊக்ககுவித்தல் என்ற போர்வையில் விபசாரம் ஒரு தொழில் துறையாக வளரும் நிலை உருவாக்கப்பட்டது.

இஸ்லாமியச் சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும் ஒரு முஸ்லிம் நாட்டில் இதுவோர் பாரிய பிரச்சினையாகியது. இந்தத் தொழில்துறையின் பரவல் வேகம் அதிகரித்ததால் பாலியல் தொழில் நோக்கத்துக்காகப் பெண்களையும் சிறுமிகளையும் கடத்துவதும் அதிகரிக்கலாயிற்று.

2015 நவம்பரில் மொரோக்கோ அரசு சர்வதேச அமைப்பொன்றின் உதவியோடு நடத்திய ஒரு ஆய்வின் படி மொரோக்கோவில் பாலியல் நோக்கங்களுக்காக சிறுமிகள் கடத்தப்படுவது ஊர்ஜிதமாயிற்று.

அத்தோடு சில மொரோக்கோ பெண்கள் வறுமை காரணமாகவும் அறியாமை காரணமாகவும் தமது குடும்பத்தவர்களாலேயே அல்லது இடைத்தரகர்களால் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதும் தெரிய வந்தது.

மொரோக்கோவில் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க வழியின்றி அந்த நாட்டின் அரசு தடுமாறுகின்றது. அதற்கான தீர்க்க தரிசனமும் அவர்களிடம் இல்லை.

புதிய அபிவிருத்தி மாதிரி என்ற தலைப்பில் அரசு வெளியிட்டுள்ள, அவர்களைப் பொருத்தமட்டில் கொண்டாட்டத்துக்குரிய அந்த அறிக்கையில் கூட மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக எந்த தூரநோக்கும் இல்லை. குறுகிய நோக்கங்களைக் கொண்டதாகவே அது காணப்படுகின்றது.

இந்த நிலைமைக்கு மேலும் சேர்க்கையாக அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை கையில் எடுத்துள்ள அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரான மறைமுகமான யுத்தத்திலும் ஈடுபட்டுள்ளது.

ஆலி லம்ப்ராபத் என்ற பத்தி எழுத்தாளர் தெரிவித்துள்ள கருத்தின் படி இதன் ஒரு அங்கமாக நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் அமைப்பான ‘அல் அதல் வல் இஹ்ஸான்’ என்ற (நீதி மற்றும் ஆன்மிகத்துக்கான) அமைப்புக்கு அதன் கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்கள் பலர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

‘அல் அதல் வல் இஹ்ஸான்’ இயக்கத்தை மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்கச் செய்து தனிமைப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது.

இஸ்லாமிய இயக்கங்களை வலுவிழக்கச் செய்து மக்களின் அன்றாட வாழ்வியலில் இருந்து அதை அப்புறப்படுத்தும் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய சதித் திட்டத்தின் ஒரு அங்கம் தான் இது.

ஒரு முஸ்லிம் நாட்டுக்குள் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது தான் மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இஸ்லாத்துக்கு எதிரான மொரோக்கோ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மிகவும் தீவிரம் அடைந்துள்ளன. மிகவும் திட்டமிட்ட முறையில் முஸ்லிம் அமைப்புக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவை பயங்கரவாதத்தோடு தொடர்பு படுத்தப்படுகின்றன.

இந்த நடவடிக்பைககளுக்கு மொரோக்கொவின் ஆளும் வர்க்கம் பெரும் ஆதரவை வழங்கி வருகின்றது. உள்நாட்டு விடயங்கள் பற்றி போதிய அறிவற்ற மேற்குலக சக்திகள் இதற்கு தேவையான அங்கிகாரத்தை வழங்கி வருகின்றன.

மொரோக்கோ மன்னர் அமெரிக்க ஐரோப்பிய குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் பூரண தயவிலும் செல்வாக்கின் கீழும் இருக்கின்றார்.

மாளிகைக்குள் வசிக்கும் அவருக்கு வெளியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் எதுவுமே தெரியாது.

முழுக்க முழுக்க மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு பொருத்தமாகவும் அதில் கட்டுண்டவராகவும் அவர் காணப்படுகின்றார்.

மொரோக்கோ தற்போது கொந்தளிக்கும் நிலையில் உள்ள ஒரு எரிமலையாக காணப்படுகின்றது.

அதன் தாக்கம் பெரும்பாலும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கும் பரவும் ஆபத்தும் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...