பாராளுமன்றத்தில் சட்டமியற்றுபவர்களால் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் ஜூலை 20 புதன்கிழமை வரை உயர் பாதுகாப்பு வலயமாக பாராளுமன்ற பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள சட்டம் இயற்றுபவர்களின் வசிப்பிடங்களிலிருந்து கொழும்புக்கு பொலிஸ் பாதுகாப்போடு போக்குவரத்து வசதிகளை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும், பத்தரமுல்லை, பொல்துவ சந்தி மற்றும் பாராளுமன்றத்திற்கு செல்லும் ஏனைய வீதிகளில் குடியிருப்பாளர்கள் மாத்திரம் பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற வளாகத்திற்கு அருகே வன்முறையை ஏற்படுத்தி பாராளுமன்ற வாக்கெடுப்பை சீர்குலைக்க போராட்டக்காரர்கள் அல்லது கிளர்ச்சியாளர்கள் முயன்றால் அதிகபட்ச பலத்தை பயன்படுத்த பாதுகாப்பு படையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.