ஜனநாயக ரீதியிலான, அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் பாராளுமன்றம் இடமளிக்காது.
நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளார்கள். அதனை பாராளுமன்ற கோட்பாடுகளுக்கமைய நிறைவேற்றுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (27) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது சிறப்பு கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் ஜனநாயகத்தின் கேந்திர மத்திய மையமாக பாராளுமன்றம் உள்ளது. நாட்டின் சகல செயற்பாடுகளுக்குமான தீர்மானங்களும் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றினைந்து செயற்படுகிறார்கள்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் சம்பிரதாயத்தை பாதுகாக்கும் வகையில் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் குறிப்பிட்டுக்கொள்கிறேன். தற்போதைய நெருக்கடியான தன்மையை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.
ஜனநாய கொள்கையை பாதுகாக்க ஆரம்ப காலத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள். அரசியலமைப்பிற்கமைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் அவதானம் செலுத்துகையில், நிறைவேற்று தெரிவு குழு ஸ்தாபிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் நிறைவேற்று தெரிவு குழுவில் அங்கம் வகிக்க முடியும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள ஏழ்மை நிலைமை பாரதூரமானது, இதன்காரணமாகவே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
எரிபொருள், எரிவாயு விநியோக கட்டமைப்பை சீர் செய்வதற்கு முறையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளன.உணவு பாதுகாப்பு தொடர்பில் பொருத்தமான திட்டங்களும் அரச நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக குரல், அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு பாராளுமன்றம் இடமளிக்காது. நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்