எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பரிந்துரைகள் இன்று பிற்பகல் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலன் மிராண்டா தெரிவித்தார்.
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள சிறிதளவு குறைவினால் பஸ் கட்டணங்கள் ஏறக்குறைய 2 வீதத்தால் குறையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பல பஸ்கள் எரிபொருள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மேலும் பிற்போடப்பட்டால், குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச எச்சரித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இன்று ஜூலை 18ஆம் திகதி குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று ஜுலை 18 ஆம் திகதி போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டால் நாளை ஜுலை 19 ஆம் திகதி மேலதிக பஸ்களை இயக்குவதற்கு திட்டமிடப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் திறம்பட விநியோகம் செய்யப்பட்டால் பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நேற்றிரவு ஜூலை 17ஆம் திகதி வரை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.