இலங்கைக்கு அருகில் உள்ள கடலோரப் பகுதிகளில் இந்தியா தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்புப் படையினர் நேற்று முதல் விமானம் மற்றும் தரைவழியாக தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகளை பல மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான கண்காணிப்பு பணிகள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்காக அதி நவீன கடல்சார் கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன விரைவு தாக்குதல் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து இந்திய கடற்படையினர் கூறியதாவது,
வெளிநாட்டினர் நாட்டிற்குள் வருவதை தடுக்க கடல் எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் உயர் தகவல் தொடர்பு வசதிகளுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளமை இந்திய பாதுகாப்புப் படையினரின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியா தனது பிம்பத்தைக் காண்பிக்கும் நடவடிக்கையாக இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த யுவான் வாங்-5 கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ளது.