சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்கவுள்ளதாக ஜே.வி.பி அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவர்கள் கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்த ஹதுன்நெத்தி, எவ்வாறாயினும், சர்வகட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ‘சர்வ கட்சி அரசாங்கம் பற்றிய எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
அனைத்துக் கட்சி அரசாங்கம், பொதுத் தேர்தலை நடத்தவோ அல்லது எளிதாக்கவோ செய்யும் இடைக்கால அரசாங்கம் அல்ல.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அதிகாரத்தை நிலைநாட்டவும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இது உருவாக்கப்பட்டது.
ஜனாதிபதி அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு தற்போது ஏனைய கட்சிகளை அதில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது அனைத்துக் கட்சி அரசு அல்ல,” என்றார்.