அம்பாறை மாவட்டத்தில் தமிழர் வாழும் ,பெரிய நிலப்பரப்புடன் கூடிய திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கான நடவடிக்கைகள் மீண்டும் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்த பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு வேலைக்கு கடந்த ஏழு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பாரிய நிறுவனம் ( தம்சிலா நிறுவனம்) பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இதன் போது, அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பலைகளை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதன் காரணமாக அவை நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இன்று இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து அரசாங்கத்துக்கு வருவாய் சேர்க்கும் நோக்குடன் மீண்டும் அகழ்வு பணி ஆரம்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் தம்பட்டை தொடக்கம் உமிரி வரைக்கும் இந்த நிகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இருந்தது.
இருந்தாலும், சனச்செறிவு கூடிய பிரதேசங்களான தம்பட்டை தொடக்கம் விநாயகபுரம் போன்ற பகுதிகளில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ள முடியாது என்று கூறப்பட்ட காரணத்தினால், தற்போது விநாயகபுரம் கோரைக்களப்பு தொடக்கம் உமிரி வரைக்குமான சுமார் 4 கிலோ மீட்டர் தூர கடலோர பகுதி இல்மனைட் அகழ்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
எனினும், பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணமே இருக்கின்றார்கள் .
அரச அதிகாரிகளும் அதற்கான பதில்களை தெரிவித்தவண்ணம் இருக்கின்றார்கள்.
இதனை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் அதிகார சபையும், கடலோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களமும் அகழ்விற்கு ஓரளவு சாதகமான பதிலை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது .
ஆனால், இந்த அறிக்கையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. அரசு சார்ந்து இந்த அறிக்கை வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
இன்னும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் இதற்கு எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை.
இதன் காரணமாக நடவடிக்கை தடைப்பட்டு வருகின்றது. அவர்களது ஒப்பமும் பெறப்பட்டால் மறுகணமே இவ் அகழ்வு ஆரம்பிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
உண்மையிலேயே, இவ் அகழ்வு இடம்பெற்றால் கோரைக்களப்பு, விநாயகபுரம், பாலக்குடா, உமிரி, சங்கமன்கிராமம், தாண்டியடி, கோமாரி, மணல்சேனை, செல்வபுரம் ஆகிய கிராமங்களின் குடும்பங்கள் இந்த இல்மனைட் அகழ்வால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தடுத்து நிறுத்தபடாவிட்டால் விரைவில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக மக்கள் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.