தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அனைத்து மாணவர் பேரவையின் ஒருங்கணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு எதிராக பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சந்தேகநபர்கள் மூவரையும் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சரிடம் விசாரணை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18 மற்றும் மறுநாள் கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, வசந்த முதலிகே, பூஜ்ய கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் குணதிலக்க உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டது.