2029 இல் நடைபெறவுள்ள 10 ஆவது ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து சவூதி அரேபிய ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் கடிதமொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்துக்கமைவாக இந்தப் போட்டிகளை சவூதியில் நடத்துவது அதன் நோக்கமாகும். சவூதி அரேபியாவை பிராந்தியத்தின் சிறந்த சுற்றுலா தளமாக்குவதற்கான முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் நியோம் (Neom) கம்பனியின் ட்ரோஜெனா (Trojena) மலைக் குன்றுகளை இலக்கு வைத்து இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. நியோம் கம்பனியின் திட்டத்தின்படி ட்ரோஜெனா சவூதியின் வடமேல் பிராந்தியத்திலுள்ள குளிரான மலைப் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும்.
ஏற்கனவே பிராந்தியத்தின் உல்லாசபுரியாக டுபாய் மாறி இருக்கின்றது. இதற்கிடையில் உலகப் புகழ் பெற்ற பைபாவின்(fifa) 2024 ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளை கத்தார் நடத்தவுள்ளது. இந்த நிலையிலேயே உஷ்ணம் அதிகமாயுள்ள சவூதி அரேபியா ஆசிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தனது ஆர்வத்தை வெளியிட்டுள்ளது.
08 ஆவது ஆசிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் ஸப்போரோவில் 2017 இல் நடைபெற்றன. 09 ஆவது போட்டி 2025 இல் தென்கொரியாவின் கங்வொன்னில் நடைபெறவுள்ளது.