தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் இன்று (ஆகஸ்ட் 29) தனியார் பஸ்களின் சேவை 80 வீதத்தால் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
முறையான முறைமையின் கீழ் கடந்த மாதம் எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் எரிபொருள் விநியோகம் செய்யப்படாமையால் தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதற்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாiலை, அலுவலக நடவடிக்கைகள் நடைபெறும் நாளில் பேருந்து சேவைகள் தடைபடுவதால் மாணவர்கள்- ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும் அதற்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பாடசாலை பஸ் சேவை எரிபொருள் பற்றாக்குறையால் இன்று முதல் இயங்குவதை நிறுத்த வேண்டியுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பஸ் சேவையின் முதற்கட்டத்தின் கீழ், மேல்மாகாணத்திற்குள் 47 வழித்தடங்களில் 130 பஸ்கள் சேவையில் ஈடுபட ஆரம்பித்த போதிலும் கடந்த 23ம் திகதி முதல் லங்காம டிப்போ முழு எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்காததால் பாடசாலை சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே இவ்விடயம் தொடர்பில் பஸ் உரிமையாளர்கள் பிராந்திய அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளதாகவும், அதற்கமைவாக டிப்போவுடன் கலந்துரையாடி அவர்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருளைப் பெறுவதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.