அகில இந்திய தனியார் சட்ட வரியத்தின் முன்னாள் உப தலைவரும் பன்னூலாசிரியரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவருமான மௌலானா ஜலாலுதீன் உம்ரி நேற்று (27)டெல்லியில் காலமானார்.
அன்னாருடைய ஜனாஸா நல்லடக்கம் இன்று காலையில் டெல்லியில் உள்ள இஷாஅதுல் இஸ்லாம் பள்ளிவாசலில் நடைபெற்றது.
பல்வேறு தேசிய சர்வதேச பணிகளில் தன்னுடைய முழு வாழ்வையும் அர்பணித்து செயற்பட்ட ஒரு பெரும் அறிஞர் என்ற வகையில் அன்னாரின் பணிகள் குறித்த சில குறிப்புக்களை இங்கு நாம் பகிர்ந்துகொள்கின்றோம்.
1935 ஆம் ஆண்டு தமிழ்நாடு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள புட்டகிராம் என்ற கிராமத்தில் பிறந்த மௌலானா ஜலாலுதீன் உம்ரி அவர்கள், தனது தாயிடம் ஆரம்ப அடிப்படை அறிவுகளையும் சன்மார்க்க பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டு, பின்னர் தென்னிந்தியாவில் பிரபலம் பெற்ற ஜாமியா தாருஸ்ஸலாமில் இஸ்லாமியக் கல்வியில் தன்னுடைய உயர்கல்வியை தொடர்ந்தார்.
1954 ஆம் ஆண்டுகளில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தில் இணைந்துகொண்ட அவர், தன்னுடைய முழு வாழ்க்கையையும் எழுத்துத் துறையிலும் சமூக சீர்திருத்தப் பணிகளிலும் தேசிய நலன்புரி சார் விவகாரங்களிலும் இறுதி மூச்சு வரை கழித்தார்.
மௌலானா மேற்கொண்ட பணிகள் ஏனையோருக்கு முன்னுதாரணமாக அமைகின்ற அளவிற்கு எந்தத் துறையிலும் சளைக்காதவர் என்ற வகையில் அவருடைய பணிகள் அமைந்திருந்தன.
இந்தியாவின் பல்வேறு பொது நிறுவனங்களிலும் முஸ்லிம்கள் சார்ந்த நிறுவனங்களிலும் ஊடக நிறுவனங்களிலும் இன்னோரன்ன பிற நிறுவனங்களிலும் பொறுப்புக்களை வகித்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட ஒருவர் என்ற வகையில் அவரின் பணிகள் பரந்து காணப்பட்டன.
அந்த வகையில் ஜாமியத்துல் பலாஹ் என்ற இஸ்லாமிய கல்லூரியில் அதன் தலைவராகவும், கிராஹ்வில் அமைந்திருக்கின்ற இஸ்லாமியஆய்வு மையத்தின் தலைவராகவும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உப தலைவராகவும், அகில இந்திய முஸ்லிம் முஷாவரத் என்ற இந்திய முஸ்லிம்களின் சமகால விவகாரங்களுக்குரிய உயர் சபையின் தலைவராகவும், அத்தஹ்வா, அல்ஹயாத் உள்ளிட்ட இன்னும் பல்வேறு சஞ்சிகைகளுடைய ஆசிரியராகவும் இருந்து மேற்கொண்ட அறிவு, ஆய்வு, பொது விவகாரங்கள் என அவரது பணிகள் நீண்டு செல்கின்றன.
சவூதி, அரேபியா, கட்டார், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பங்குபற்றி பல்வேறு சிறப்புரைகளை ஆற்றியுள்ள மௌலானா அவர்கள், சமகால விவகாரங்களோடு சம்பந்தப்பட்ட பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுகளையும் குறிப்பாக 50 க்கு மேற்பட்ட தரமான நூல்களையும் அறிவுலகத்திற்கு வழங்கிய ஒரு மேதையாகவும் கருதப்படுகின்றார்.
இவரால் எழுதப்பட்ட நூல்கள் ஆய்வுக் கட்டுரைகள் என்பன உருது, ஆங்கிலம், ஹிந்தி உட்பட உள்ளூரில் பலமொழிகளிலும் இன்னும் அரபு, துருக்கி, ரஷ்ய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இவருடைய சிந்தனைகளும் அறிவும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றன.
இத்தகைய ஒரு பாரிய அறிவு, ஆன்மீக, சமூகப் பணியை செய்த நிலையில் மரணத்தை தழுவியுள்ள மௌலானா ஜலாலுதீன் உம்ரியின் பணிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.