லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அரசியல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி, இறந்தவர்களில் நாட்டின் இளம் நகைச்சுவை நடிகரான முஸ்தபா பராக்காவும் ஒருவர்.
லிபியாவின் ஆளும் கட்சிக்கும் மற்றொரு அரசியல் குழுவிற்கும் இடையிலான இந்த மோதல்களை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு, அந்நாட்டின் நீண்டகால ஆட்சியாளரான கேணல் முயம்மர் கடாபியை அகற்றிய எழுச்சிக்குப் பிறகு, லிபியாவில் மோதல் சூழ்நிலை தொடர்ந்தது, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில், முந்தைய காலத்தை விட அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், லிபியா தற்போது கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது, உலகப் பொருளாதார குறிகாட்டிகளில் உலகின் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக முன்னணியில் உள்ளது.
இந்த நிலையில் ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல்கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென்று மோதல் வெடித்தது.
இந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு, வன்முறை போன்ற சம்பவங்கள் அரங்கேறியது. இவ்வாறு கிளர்ச்சியாளர்களின் இருதரப்புக்கு இடையில் நடந்த இந்த மோதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பல கட்டிடங்கள், வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.