நேற்று (26) மறைந்த இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளருமான கலாநிதி யூஸுப் அல்-கர்தாவியின் மறைவை முன்னிட்டு பேருவளை ஜாமிஆ நளிமிய்யாவின் பீடாதிபதி அஷ்ஷேக் எஸ்.எச்.எம். பளீல் வெளியிட்ட இரங்கல் செய்தியை வாசகர்களுடன பகிர்ந்துகொள்கின்றோம்.
அல்லாமா – பேரறிஞர் கர்தாவி அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பின் பேரில் தற்காலிக உலகில் இருந்து நிரந்தர உலகத்திற்கு சென்றுவிட்டார்.
யார் ஏற்றாலும் மறுத்தாலும் 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தை பாதுகாக்கவும் வளர்க்கவும் அவர் இமாலயப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
அல்லாஹ் அவரது பணிகளை ஏற்று அங்கீகரிப்பானாக! தனது ஏழு பிள்ளைகளையும் கலாநிதிகளாக்கிய வளமான குடும்பத்தின் தகப்பன் அவர். நான்கு பெண்கள் மூன்று ஆண்கள்.
தனது எழுத்துக்கள், உரைகள் வாயிலாக அவர் பின்வரும் கருத்தியல்களை ஆழமாக வலியுறுத்தி வந்திருக்கிறார்,
இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். அதனை முழுமையாகவே பின்பற்ற வேண்டும்.
அது உடல், அறிவு, ஆத்மா ஆகிய மூன்றையும் ஏக காலத்தில் போஷித்து வளர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிறது.
அது எல்லாக் காலத்துக்கும் எல்லா சமூகங்களுக்கும் பொருத்தமானது.
அது எவ்வித விளிம்பு நிலைகளுக்கும் இட்டுச் செல்லாத நடுநிலைப் பண்பையே கொண்டிருக்கிறது.
அதன் போதனைகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் சூழலுக்கு மட்டுமன்றி சிறுபான்மையாக வாழும் சூழலுக்கும் பொருத்தமாகும்.
கரைந்து போகாமல், தனித்துவம் பேணிய நிலையில், சமாதான சகவாழ்வைப் பேணித் தான் ஒரு முஸ்லிம் சிறுபான்மை சூழலில் வாழ வேண்டும்.
மார்க்கத்தின் எல்லாப் போதனைகளும் சம தரமானவை அல்ல.
அவற்றில் முதன்மைப்படுத்த வேண்டியவை, உடனடியாக செய்யப்பட வேண்டியவை அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்ற ஒரு பகுதி இருப்பது போலவே காலதாமதமாக செய்ய முடியுமானவை, ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்தவை என்ற ஒரு பகுதியும் உள்ளது.
அதன் தனித்துவமான சிறப்புப் பண்புகள் அது அல்லாஹ்வின் மார்க்கம் என்பதற்கான சான்றாக இருப்பது போலவே மனித இயல்புக்கு மிகப் பொருத்தமானவையும் உள்ளன.
அறிவு எனும் போது வஹீயின் அறிவு அப்பழுக்கற்றதாகும். பகுத்தறிவின் மூலம் அடையப் பெற்ற அறிவு ஞானங்களை வஹியின் தராசில் வைத்தே அளவிட வேண்டும். ஆனால், இஸ்லாமிய சமூகத்தின் நாகரீகப் பங்களிப்பில் ‘வஹீ’, ‘பகுத்தறிவு’ ஆகிய இரண்டுக்கும் சம பங்களிப்புண்டு.
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், மனித சமூகத்தின் உயர்ச்சியை இலக்காகக் கொண்டு கற்கப்படும் அனைத்து கல்விகளும் இபாதத்கள் தான்.
இவை போன்ற பல அடிப்படையான சிந்தனைகளை அவர் ஆழமாக வலியுறுத்தி வந்திருக்கிறார்.
அன்னாரது மாணவர்களில் ஒருவரான கலாநிதி வஸ்பீ ஆஷுர் விடுத்த இரங்கல் செய்தியில் அல்லாமா கர்ளாவியின் எழுத்துக்கள் 100க்கும் அதிகமான வால்யூம்களாக வெளியிடப்பட தயார் நிலையில் இருப்பதாகவும் அவற்றை காண முன்னரே அவர் விடைபெற்றுச் சென்று விட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
உலகில் பல இஸ்லாமிய மன்றங்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு வித்திட்ட அவர் நூற்றுக்கணக்கான அமைப்புக்களில் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அவரிடம் கற்ற அவரது சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள் ‘றாபிதது தலாமீதி கர்ளாவீ’ கர்ளாவியின் மாணாக்கர்கள் மன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி பல ஆய்வுகளைச் செய்துவருகிறார்கள்.
கடும்போக்கு, தீவிரவாதம், பிடிவாதம்,கண்மூடித்தனம், வெறித்தனம் என்பவற்றை எதிர்த்து இஸ்லாத்தின் தாராளத்தன்மை,நெகிழ்வுத் தன்மை, அரவணைக்கும் பண்பு, விட்டுகொடுப்பு, சகவாழ்வு என்பன தொடர்பாக அவர் அதிகமதிகம் பேசியும் எழுதியும் வந்தார்.
அப்படியிருந்தும் அவர் சிலரால் காரசார விமர்சிக்ப்பட்டுள்ளார். தீவிரவாதத்தை வன்முறையைத் தூண்டியவர், பத்வாக்களில் அதிகமதிகம் தாராளமாக நடந்தார் என்றெல்லாம் கூறப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டார்.
அவரது வபாத் தொடர்பாக இரங்கல் செய்திக்கு பதிலாக சந்தோஷத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். சில நாடுகளுக்கு அவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
அவரை விமர்சித்தவர்கள் மூன்று சாரார்:-
இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டோர்.
அவரது நூல்களை வாசிக்காதவர்கள் அல்லது நுணிப்புல் மேய்ந்தவர்கள்
சத்தியத்தை உரிய முறையில் புரிந்து ஹக்கை ஹக்காக கூற வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள்.
மூன்றாவது தரப்பினரது விமர்சனங்களே நியாயமானவை. இவர்கள் இமாம் கர்ளாவியின் பாரிய பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை அவரது பிழைகளை ஆதாரங்களோடு ஆனால், பண்பாடாக சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அவரை நாம் ஓர் பேரறிஞராக பார்க்கும் அதேவேளை அவரை மனிதராகவே பார்க்க வேண்டும். நபிமார்களைத் தவிர மற்றைய அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே.
அவரது சில நிலைப்பாடுகள் மற்றும் பத்வாக்களில் பிழைகள் இருக்கலாம். அவரது சில இஜ்திஹாத்கள் பிழைத்திருக்க லாம். இந்தப் பார்வை எல்லா அறிஞர்களைப் பொருத்தவரையில் எமக்கு வர வேண்டும்.
ஆனால், நீரை விட்டு விட்டு பாலை மாத்திரம் அருந்தும் அன்னப் பறவை போன்று நாம் ஏன் இருக்கக் கூடாது? அவரது பிரமாண்டமான பங்களிப்புக்களுக்கு முன்னால் அவர் விட்ட தவறுகளை நாம் நியாயமாக அணுக்கப் பழக வேண்டும்.
அவரை விமர்சிப்பவர்கள் தாமும் மனிதர்களே என்பதை மறக்கலாகாது. சிட்டுக்குருவி மோதி மலை உடையுமா என்று கேட்கத் தோன்றுகிறது.
அவர் தவறு செய்திருந்தால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக நற்கருமங்களை ஏற்றுக் கொள்வானாக.
இமாம் யூஸுப் கர்தாவி கூறும் கருத்துக்கள் அல்லது வெளியிட்ட பத்துவாக்கள் எல்லாம் இலங்கைச் சூழலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூற முடியாது.
அவற்றில் சில பொருத்தமற்றவையாக இருக்கலாம். எனவே அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், எமது வாசிப்பு விரிந்தாக இருக்க வேண்டும். எல்லா அறிஞர்களது கருத்துக்களையும் திறந்த மனதோடு வாசிக்கும் சிந்தனை சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் அவற்றில் பொருத்தமானவற்றையே எமது சூழலுக்கு நாம் அனுமதிக்க வேண்டும்.
காந்தி பின்வருமாறு கூறுகிறார் ‘எனது வீட்டு ஜன்னல்களை நான் திறந்து வைத்ததுள்ளேன். எல்லா புறத்திலிருந்தும் காற்று வருவதற்கு. ஆனால் எந்த காற்றும் என்னை அள்ளிச் செல்ல அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
எமது வாசிப்பு பரந்துபட்ட தாக இருக்க வேண்டும்.டாஸ் கெபிடலை வாசிப்பவர்கள் எல்லொரும் கம்யூனிஸ்ட்கள் என்றோ பகவத் கீதையை வாசிப்பவர்கள் இந்துக்களாகிவிடுவர் என்றோ முடிவெடுக்கக் கூடாது.
எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தை நோக்கி விடுக்கப்பட்ட பயங்கரமான அறைகூவல்களை ஆதாரங்களோடும் பகுத்தறிவு ரீதியாகவும் நெஞ்சுரத்தோடு நின்றும் தைரியமாக எதிர்கொண்ட ஒரு ஜாம்பவான் அவர். இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியை பாதுகாத்து நின்ற பேராசான்.
தனிப்பட்ட முறையில் நான் இன்று இந்த நிலையிலும் சிந்தனைத் தெளிவில் இருப்பதற்கு அல்லாஹ்வே முழு முதற்காரணம். அல்ஹம்து வில்லாஹ். அதற்கு வசதியாக அந்த ரப்பின் ஏற்பாடாக இந்த பேராசானின் நூல்களும் பெரும் பங்களிப்புச் செய்தன என்பதை அடக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியும்.
அவர் இலங்கை வந்திருந்த போதும் பஹ்ரைன்,ஸ்தான்பூல் ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரு கருத்தரங்குகளின் போதும் அவருடன் உரையாடக் கிடைத்த போது அவரது சிஷ்யர்கள் அவர் மீது கொண்டிருந்த பக்தியைக் கண்டு பூரித்திருக்கிறேன்.
அவரது சில ஆக்கங்களை மொழிபெயர்கக் கிடைத்தமை பெரும் பாக்கியமே. அவரது நூல்கள் வாசிக்க இலகுவானவை. கையில் எடுத்தால் கண்களை அகற்ற முடியாத அளவில் ஈர்ப்புக் கொண்டவை.
மிகைப்படக் கூறுவதாக நினைக்க வேண்டாம்.அவற்றின் ஆழமும் செறிவும் லயித்துப் போகச் செய்துவிடும்.
அந்த ஆசானுக்கு நன்றிக் கடனாக நான் எழுத வேண்டும் என என் உள்ளம் தூண்டியது. எனது உள்ளம் அழுகிறது. மனது கனக்கிறது.
வபாத் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற வகையில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று அந்த குரு விடைபெற்று சென்றுவிட்டார்.
ஆனால் அன்னார் விட்டுச் செல்லும் ஆக்கங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்தவர்களும் அன்னாருக்கு ‘இல்முன் யுன்தபஉ பிஹீ’ ஆக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை புணர் நிர்மாணம் செய்யக் கூடியவர்களை (முஜஜ்ஜித்களை) அனுப்புவான் என்ற ஹதீஸுக்கு அவர் கூறும் விளக்கம் அற்புதமானது. அந்தவகையில் அவர் ஒரு முஜஜ்ஜித் என்பது அடியேனின் நம்பிக்கை.
யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து நற்காரியங்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவாயாக!