கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் முதல் தரம் முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
‘ஆங்கிலம் எளிமையானது’ என்ற தொனிப்பொருளில் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் உலகத்துடன் அச்சமின்றி பயணிக்க உதவும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தங்களுடன், மேம்பட்ட தொழில்நுட்ப உலகில் ஆங்கில மொழித் திறன் அவசியம்,’ என்று அவர் கூறினார்.
தரம் ஆறாம் வகுப்பு முதல் சிங்கள மொழி மூல வகுப்புகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
மேலும், ‘பெரும்பாலான பாடச் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் குழந்தைகள் தானாகவே பழகிவிடுவார்கள், கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் படிப்பில் முன்னேற முடியாமல் சிரமப்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று ஆங்கில மொழி அறிவு இல்லாமை மற்றும் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அமைப்பு, கல்வி முறை மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் ஆதரவுடன் ஆங்கில மொழித் திறனை வழங்க தனியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.