ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பாடசாலை மாணவர்கள் ‘இவன் இந்து, நான் முஸ்லிம்’ என்று கூறி சிரித்து மகிழும் வீடியோவொன்று அண்மையில் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல மதங்கள், மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள், உணவு பழக்க வழக்கங்களை கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்தியா என்ற தாரக மந்திரம் அனைவரையும் ஒற்றுமையாக பிணைத்து வைத்து இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடு என்று உலக நாடுகள் இந்தியாவை போற்றி பாராட்டி வருகின்றன.
இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடந்து வருகின்றன.
இப்படி ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அரசியல் தூண்டுதல்கள் காரணமாக சாதி, மத மோதல்களும் பெருகி வருவது கவலையளித்து வருகிறது.
பெரியவர்களுக்கு மத்தியில் இருந்த சாதிய மதவாத மோதல்கள், அண்மை காலங்களாக மாணவர்களுக்கு மத்தியிலும் பரவத் தொடங்கி இருக்கிறது.
இந்த சூழலில் நாட்டுக்கே மத நல்லிணக்க, சகோதரத்துவ பாடத்தை எடுத்திருக்கிறார்கள் 2 பாடசாலை சிறுவர்கள்.
சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பதிவு செய்தது யார், எந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பன போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை.
தெளிவற்றதாக இருக்கும் குறித்த வீடியோவில் வரும் இளம் சிறுவர்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெளிவான ஒரு பாடத்தை சில நொடிகளில் எடுத்து இருக்கிறார்கள்.
அதுதான் மத நல்லிணக்கம். வைரலாகி இருக்கும் அந்த பாடசாலை மாணவர்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நபர் அவர்களிடம் ஏதோ கேட்க, ஒரு சிறுவன் தனது நண்பனை தொட்டு ‘இவன் இந்து, நான் முஸ்லிம்.’ என்று சொல்லி சிரிக்கிறார். அடுத்த சில நொடிகளில், ‘இவன் முஸ்லிம், நான் இந்து. இவன் பெயர் முனவர். நான் ஜுது’ என்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(மூலம்: டைம்ஸ்)