ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் தற்போது செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு அதனைப் பயன்படுத்தியுள்ளதாக இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இந்த விடயத்தை முன்வைக்கவுள்ளதாக அதன் செயற்குழு உறுப்பினர் நுவான் போபகே தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் இந்த அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்டோர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உண்மைகளை முன்வைக்க உள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, முஜிபர் ரஹ்மான் உள்ளிட்டோர் ஜெனீவா சென்றுள்ளனர்.