இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் அமெரிக்க டொலர் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சுவிஸ் உலக சொத்து அறிக்கை 2022 ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது.
அதேபோல சீனாவிலும் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 1 மில்லியன் டொலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ல் 8.75 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021 நிலவரப்படி இந்தியாவில் 7.96 இலட்சம் பேர் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.
2026-ல் இந்த எண்ணிக்கை 105 சதவீதம் உயர்ந்து 16.23 இலட்சமாக இருக்கும் தெரிவித்துள்ளது.
அதேபோல், சீனாவில் 2021 நிலவரப்படி 62 இலட்சம் பேர் கோடிஸ்வரர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2026 இல் 97 சதவீதம் உயர்ந்து 1.2 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கோடிஸ்வரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.4 கோடி கோடிஸ்வரர்கள் உள்ளனர்.
2026இல் அந்த எண்னிக்கை 2.7 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடிஸ்வரர்களின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், பிரிட்டன் நான்காம் இடத்திலும் உள்ளன.
தற்போது உலக கோடிஸ்வரர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் பங்கு 1 சதவீதமாக உள்ளது.