காத்தான்குடி முத்துவாரன் கரையோரப் பகுதியில் படகுகளில் சட்டவிரோத குடியேற்றம் மூலம் மனித கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் களவாஞ்சிக்குடி முகாம் அதிகாரிகள் இணைந்து நேற்று இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட குழுவொன்றுக்கு ஐந்து சந்தேக நபர்களும் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது நான்கு டிங்கி படகுகள் மற்றும் 70 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
28, 31, 33, 37 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மற்றும் நாவலடியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.