பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை ஏற்பட்டிராத பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இவ்வார ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னரும் நிதி திரட்டப்படும் என கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான் தெரிவித்தார்.
கடந்த வாரம் 09 ஆம் திகதிய ஜூம்ஆ வசூலை பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த வார ஜூம்ஆ வசூலையும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்காக அமைத்துக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 1200 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளார்கள். சிந்து மாகாணத்தின் பல கிராமங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஆயிரக் கணக்கானோர் இன்றும் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பயிர் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் மக்களுக்காக உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்மையில் உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அழிந்து போயுள்ள பாகிஸ்தான் கிராமங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு 5 வருடங்களாவது செல்லும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் அரசாங்கம் இவற்றுக்கென 10 பில்லியன் டொலர்களாவது தேவைப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
பாதிக்கப்பட்ட தமது மக்களுக்கு உதவி செய்யுமாறு பாகிஸ்தான் விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் இணைந்து நிதி திரட்டல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வார ஜூம்ஆவுக்குப் பின்னர் சேகரிக்கப்படும் நிதியையும் சேர்த்து அடுத்த வாரமளவில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் அஸ்லம் ஒஸ்மான் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கென கடந்த வாரம் ஒரு தொகை தேயிலையை அன்பளிப்புச் செய்திருந்தது.