இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஏமாற்றம் தெரிவித்த இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் நேற்று (11) 51ஆவது ஐக்கிய மாநாட்டில் இந்த கடுமையான சட்டம் தொடர்பில் மனித உரிமை மீறல்களை முன்னெடுப்போம் என வலியுறுத்தியுள்ளனர்.
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று (12) ஆரம்பமாகவுள்ளன.
அமர்வுகளின் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான மனித உரிமை மீறல்கள் எழுப்பப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த கொடூரமான சட்டத்தை அமுல்படுத்துவதில் தமது அமைப்பு முக்கியமாக கவனம் செலுத்தும் என்றும் இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் பேரவையின் சர்வதேச விவகார ஒருங்கிணைப்பாளர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் தீர்க்கப்படாதது மற்றும் பாரிய மனித துன்பங்களை உருவாக்குவது தொடர்கிறது, ஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளது. இந்த சட்டத்தின் மாநில அளவிலான துஷ்பிரயோகம், சட்டவிரோத கைதுகள், தடுப்புகள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்கின்றன, என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 300 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளுக்கான தடைகள் தொடர்வதாகவும், ஏற்கனவே சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அஸ்மின் மேலும் குறிப்பிட்டார்.
இதனால், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள், பல்வேறு மனித உரிமை மீறல்களின் விளைவுகளை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடிப்படையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் அமுல்படுத்துவதுடன், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் வாழும் இலங்கை முஸ்லிம் மனித உரிமை ஆர்வலர்கள் கோருகின்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, நாட்டின் பொருளாதார முறைகேடு மற்றும் ஊழலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும் அரசியல் சவால்களையும் எதிர்கொள்கிறது.
எவ்வாறாயினும், சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் மனித உரிமைகள் விவகாரங்களில் பொறுப்புக்கூறுவதில் இருந்து இலங்கை ஒருபோதும் தப்ப முடியாது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான அரசாங்கங்கள் எவ்வித நம்பிக்கையூட்டும் முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது பொதுவான அவதானிப்பு.
இந்நிலையில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் பல பெரிய பொருளாதார முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து கிடைக்கப்பெறும் தரவுகள் பொருளாதார துஷ்பிரயோகங்கள் மூலமும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறது, எனவும் அஸ்மின் கூறினார்.
2022 செப்டெம்பர் 12 முதல் ஒக்டோபர் 7 வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 51ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் கவனம் செலுத்தப்பட உள்ளன.
இந்த அமர்வுடன் 46/1 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் காலாவதியாகிவிடும் என்பதால், இங்கிலாந்து புதிய முன்மொழிவுகளை மீண்டும் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.