பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவுகளை எடுத்துரைக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் செப்டம்பர் 6 ஆம் திகதி விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை வர்த்தக சமூகத்தினர் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
இந்த இக்கட்டான நேரத்தில் பாகிஸ்தான் மக்கள் மற்றும் அரசாங்கத்துடன் நாங்கள் அனைவரும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், என்றும் உறுதுணையாக நிற்கிறோம் என்றும் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் ஃபாரூக் புர்கி கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) சமீபத்திய அறிக்கையின்படி, 81 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மற்றும் பாகிஸ்தானில் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு நிவாரண நிதியத்தை நிறுவியுள்ளது, அங்கு வெளிநாடு மற்றும் பாகிஸ்தானில் உள்ளவர்கள் வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடை அளிக்கலாம்.
இதேவேளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.