நபிகளார் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் மீலாத் விழா சம்பந்தமாக எதிரும் புதிருமான கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்லாமிய சட்டக் கலை வல்லுனர்கள் இது குறித்து பல்வேறு கோணங்களில் வித்தியாசமாக அணுகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
எனவே மீலாத் விழா விவகாரத்தில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் ஷரீயா சார்ந்து அதனை அணுகியுள்ள முறைகளையும் சரிவர புரிந்து கொள்வது அவசியமாகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு மிகச் சரியான புரிதல் தான் முதன்மை தேவையாகும்.
அவ்வாறே இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளில் உள்ள கிளை விவகாரங்களில் தோன்றும் கருத்து முரண்பாடுகள் கண்டிப்பாக மக்களுக்கு அருளாகவே அமையும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய சட்டக் கலை விதிகளுக்கு அமைய கருத்துவேறுபாடுள்ள ஒரு விடயம் தடுக்கப்பட வேண்டிய தீமை அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பொதுவிதிகளின் பின்ணணியோடு மீலாத் விழா குறித்து அறிஞர்கள் முன்வைத்துள்ள கருத்துக்களை நோக்குவது சீரான புரிதலுக்கு வழிவகுக்கும்.
எங்கள் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்ட இறதித் தூதர். அவர் உலக மாந்தர்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய உயர்ந்த தலைவர். அண்ணலார் அகிலத்திற்கோர் அருட்கொடை. எனவே நபிகளார் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் அலாதியான சிறப்புப் பெறுகிறது. காரணம் நபிகள் நாயகம் அந்த மாதாத்தில் பிறந்ததானது அல்லாஹ்வின் தெரிவாகும். அது மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. காரணம் அவர் மாணுட வசந்தத்தின் வருகையாக, வழிகாட்டியாக மற்றும் மனித நாகரிகத்தின் முன்னோடியாக திகழ்ந்தார். எனவே மனமகிழ்ந்து கொண்டாப்படும் அந்த நாள் பெருநாள் தினத்தை போன்று தனியான வணக்க வழிபாடுகளை உள்ளடக்கிய ஒரு பண்டிகை நாள் அன்று.
அல்லாஹ் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கியுள்ள இரண்டு பெருநாட்களில் ஒன்று புனித ரமழான் மாதத்தின் பர்ழான நோன்புடன் தொடர்படுகிறது. இரண்டாவது பெருநாள் தினம் ஹஜ் கடமையோடு தொடர்படுகிறது. ஐங்காலத் தொழுகையோடு தொடர்பான பெருநாளாக வெள்ளிக் கிழமை கருதப்படுகிறது. அவ்வாறே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீலாத் நபி தினம், பத்ர் நினைவு தினம், மக்கா வெற்றி போன்ற தினங்கள் இறை விசுவாசிகள் மகிழ்ந்து கொண்டாடக் கூடிய மகிழ்ச்சிக்குரிய நாட்களாகும்.
நபிகள் நாயகம் மீது அன்பையும், நேசத்தையும் அதிகரித்துக் கொள்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும். அந்தவகையில் நபி பிறந்த இந்த மாதத்தில் இறைதூதரின் ஸுன்னாவை படித்து, ஸீராவை வாசித்து பயன் பெறுவது தவறல்ல. உண்மையான நேசத்தின் அடையாளம் இறை தூதர் கொண்டுவந்ததை பின்பற்றுவதாகும். எனவே சிறப்பான இந்த மாதத்தில் ஸீராவை படிப்போம். ஸுன்னாவை பின்பற்றுவோம். இது மீலாத் விழாக் கொண்டாட்டம் குறித்து மொரிதானியாவைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முஹம்மத் ஹஸன் தெத்தூ அவர்களின் பார்வையாகும்.
நபி பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மீலாத் விழா குறித்து அல்-குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே மீலாத் விழாவை தொழுகை, நோன்பு போன்ற ஒரு வணக்க வழிபாடாக எடுத்துக் கொள்வது மறுக்கப்பட வேண்டிய ஒரு பித்அத்தாகும். ஆனால் மீலாத் தினத்தை மத அனுஷ்டானமாக எடுக்காமல் வெறும் கலாசார, சமூக பெறுமானம் கெண்ட சுய விருப்ப விழாவாக கொண்டாடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. அந்த நாள் கொண்டாட்டம் உள்ளங்களில் இறை தூதர் மீதான அன்பை அதிகரித்து, நபிகளார் மீதான மதிப்பபை பலப்படுத்தி, அண்ணலாரின் ஆளுமையை நினைவு கூறும் சந்தர்ப்பங்களாக அமையுமாயின் அதை கூடாது என்று தடுக்க என்ன தேவை இருக்கிறது.
ஸீராவை படிப்பது, அதை பின்பற்றுவது, நபிகள் மீது அன்பை வளர்ப்பது காலத்தின் தேவையாகும். விசேட தினங்கள் அதனை இலகுபடுத்திக் கொடுக்கின்றன. அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தை மதித்து சிறப்பித்து கொண்டாடுவது ஒரு கண்ணியமான செயலாகும். ஸீராவை கற்றுக் கொள்வதற்கும், ஸீராவின் இயங்கியல் வழிமுறையை புரிந்து கொள்வதற்கும், இறை தூதரின் பண்புகளையும் குணங்களையும் வாசித்து விளங்கிக் கொள்வதற்கும் இந்த மாதம் பயன்படுமானால் அது போற்றத்தக்க ஒன்றே. உரைகள், குத்பாக்கள், கருத்தரங்குகள், கவிதை மன்றங்கள், போன்ற வழிமுறைகள் மூலமும் கலை காலச்சார வடிவங்களினூடாகவும் ஸீராவை சமூக தளத்தில் முன்வைக்கும் போது காலத்தின் தேவை நிரப்பப்படுவதுடன் வீணான கலை வெளிப்பாடுகளுக்கு அவை மாற்றீடாகவும் அமைய முடியும்.
நபிகளார் (ஸல்) அவர்கள் உலக மக்கள் யாவருக்கும் இறைவனால் வழங்கப்பட்ட மாபெரும் அருள். நபியே கூறுங்கள்: அல்லாஹ்வின் கருணையைக் கொண்டும், அருளைக் கொண்டும் அவர்கள் சந்தோசம் கொள்ளட்டும் என அல்லாஹ் கூறுகிறான். எனவே உலக மாந்தருக்கே அருளாக வந்த இறுதி நபியின் பிறந்த மாதத்தை பயனுள்ள வழிகளில் விழாவாக கொண்டாடி மகிழ்வது அனுமதிக்கப்படடதே. இது மீலாத் நபி விழா குறித்து மொரோக்கோவை சேர்ந்த மகாஸித் அறிஞர் அஹ்மத் ரய்ஸுனி அவர்களின் பார்வையாகும்.
மீலாத் விழா கொண்டாடுவது கூடாது என்றும் அது ஒரு பித்அத் எனவும் இப்னு தைமியா, இமாம் ஷாத்பி, இப்னுல் ஹாஜ் மாலிகி, பின் பாஸ், ஸாலிஹ் பௌஸான் போன்ற சில இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா வெளியிட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் வருமாறு:
1) மீலாத் விழா கொண்டாடுவதற்கு அல்-குர்ஆனிலோ, சுன்னாவிலோ ஆதராம் எதுவும் கிடையாது. அந்த நாளை இறை தூதரோ அல்லது நபித் தோழர்களோ அல்லது தாபயீன்களோ அவர்களை துயர்ந்தவர்களோ கொண்டாடியதாக சான்றுகளும் இல்லை.
2) இது மார்க்த்தில் புதிதாக நுளைந்த ஒரு பித்அத் ஆகும். எனவே ஒரு குறிப்பிட்ட தினத்ததை தனியாக வேறுபடுத்தி விசேடமாக கொண்டாட முடியாது.
3) மீலாத் விழா கொண்டாட்டம் ஒரு வகையில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் தின விழாவுக்கு ஒப்பானது. எனவே அது மார்க்கம் தடை செய்துள்ள ஒரு ஹராமான கொண்டாட்டமாகும்.
4) நபி பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடும் மீலாத் விழா நபிகளார் மரணித்த தினம் என்பதில் கருத்தொற்றுமை காணப்படுகிறது. நபி பிறந்த தினம் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
5) மீலாத் விழா என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் நிகழ்கின்றன. எனவே அது தடுக்கப்படவேண்டிய ஒன்றே.
இனி மீலாத் விழா கொண்டாடுவது குறித்து மாறுபட்ட சிந்தனைகளை முன்வைக்கும் அறிஞர்களின் நிலைப்பாடுகளை நோக்குவோம்.
இப்னுல் ஹஜர் அஸ்கலானி, இமாம் ஸுயூதி, இமாம் ஸகாவி, இப்னு ஆஷிர், இப்னு மர்ஸுக், ஸஈத் ஹவ்வா, கலாநிதி கர்ளாவி, பைஸல் மௌவி, அஹ்மத் ரய்ஸுனி, போன்ற அறிஞர்கள் பலர் நபிகாளாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மீலாத் விழா கொண்டாடுவது அனுமதிக்கப்பட்டதே என பத்வா கொடுத்துள்ளனர். அவர்கள் அதற்கு முன்வைக்கும் சான்றுகள் வருமாறு:
1) நபிகளார் செய்யவில்லை என்பதற்காக ஹராம் என்ற முடிவுக்கு வருவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு ஆதாராமாகும். இது ஹராத்தின் வட்டத்தை விசாலப்படுத்தி அனுமதிக்கப்பட்ட ஆகுமான விடயங்களை மிகச் சிறிய எல்லைக்குள் முடக்கிவிடுகின்ற ஒரு போக்காகும். இந்த அணுகுமுறை ஷரீஆ சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கே முரணானது. எனவே ஸஹாபாக்கள் அல்லது தாபியீன்கள் செய்யவில்லை என்பதற்காக மீலாத் விழா ஹராம் என்பதற்கில்லை. அது மார்க்கம் அனுமதித்ததே என மார்க்க மேதையான மர்ஹம் பைஸல் மௌலிவி அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள்.
2) இறை நேசர்களான ஸஹாபாக்களுக்கு மீலாத் தினத்தை முன்னிட்டு விழா எடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர்கள் நபிகளாருடன் இரண்டரக் கலந்து வாழ்ந்து வந்தார்கள். நபிகளாரின் வாழ்வியல் வழிமுறைகள், அதன் பாடங்கள் படிப்பினைகள் யாவும் குர்ஆனை மனனம் செய்வது போல் மிகுந்த கரிசனையுடன் கற்பவர்களாகவும் கற்பிப்பவர்களாகவுமே காணப்பட்டார்கள். ‘நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அல்-குர்ஆனை கற்றுக் கொடுப்பது போன்று இறை தூதர் பங்குபற்றிய யுத்தங்களைப் பற்றி கற்றுக் கொடுப்போம்’ என ஸஃத் பின் அபீவக்காஸ் ரழி அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அன்றாடம் ஸீராவுடன் சகவாழ்வு கொண்ட அந்தப் பரம்பரைக்கு தினமும் அது விழாவாகத்தான் இருந்தது. மீண்டும் புதிதாய் ஒரு நாளை குறிப்பிட்டுக் கொண்டாட வேண்டிய தேவை இருக்கவில்லை.
3) ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களை தொடர்ந்து வந்தவர்களின் சிறப்புகுரிய முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் மீலாத் விழா ஹராம் அல்லது அது மக்ரூஹ் என்ற காரணங்களுக்காக அவர்கள் தவிர்ந்து கொண்டார்கள் என்பதற்கில்லை. அவர்கள் கொண்டாடவில்லை அவ்வளவுதான். ‘இறை தூதர் கொண்டுவந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தடுத்ததை முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று கூறும் அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டுவிட்டதை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்பதையே இப்படி நோக்கும்போது முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த ஸலபிகள் செய்யவில்லை என ஆதாரம் காட்டி எப்படி ஹராம் என்றோ அல்லது பித்அத் என்றோ கூற முடியும்?
4) மீலாத் விழா போன்ற இஸ்லாமிய நினைவு தினங்களை கொண்டாடுவது பித்அத் என்று கூறுவது பிழையான ஒரு சிந்தனையாகும். அல்லாஹ் அருளிய அருட்கொடைகளை நினைவுபடுத்துவதை மார்க்கம் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக அருட்கொடைகளை நினைவு கூறுமாறே அல்குர்ஆன் பல இடங்களில் கட்டளையிடுகிறது. அகழி யுத்த நிகழ்வுகள், பனூகைனுகாவின் சூழ்சிகள் பற்றி குறிப்பிடும் அல்-குர்ஆனிய வசனங்கள், அவற்றை நினைவு கூர்ந்து படிப்பினை பெறுமாறு அறிவுறுத்துகின்றது. நபி (ஸல்) அவர்களின் வருகை உலகிற்கு மாபெரும் அருள். அகிலத்திற்கு அருட்கொடை. எனவே மீலாத் தினத்தை முன்னிட்டு ரஸுல் (ஸல்) அவர்களது மகத்தான ஆளுமையை வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்வது, அல்லாஹ் அகிலத்தார்களுக்கெல்லாம் அருட்கொடையாக ஆக்கிவைத்த அவரது நிரந்தரத் தூதினை எடுத்துரைப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி பித்அத்தாக அமைய முடியும். எனவே அருட்கொடைகளை நினைவூட்டுவது இஸ்லாம் அனுமதிப்பதுடன் போற்றத்தக்க ஒன்றாகவே கருதுகிறது. அப்படியான விழாக்கள் காலத்தின் தேவையோடு ஒப்பிடும் போது அவசியமானதும் கூட.
மீலாத் தின விழா குறித்த இஸ்லாமிய அறிஞர்களின் எதிரும் புதிருமான கருத்துக்களை இதுவரை நோக்கினோம்.
நபி பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம் என்று கூறிக் கொண்டு ஷரீஆவிக்கு முராணான, தடுக்கப்பட்ட விடயங்கள் கலந்த விழாக்களை கொண்டாடுவதற்கு அறிஞர்கள் அனுமதி கொடுக்கவில்லை. அப்படியான விழாக்கள் மறுக்கப்பட வேண்டியவைகளே. காலத்தின் தேவை என்பதற்காக அல்லாஹ் அனுமதிக்காக விடயங்களை ஆகும் என்று கூற முடியாது. தவறுகள் நிகழும் என்பதற்காக ஆகுமான ஒன்றை தடைசெய்யவும் கூடாது.
ஸுரதுல் பத்ஹின் 9 வசனம் ‘அல்லாஹ்வையும் ரஸூலையும் ஈமான் கொள்ளுங்கள்; இறைத் தூதரைப் பலப்படுத்துக்குங்கள், கண்ணியப்படுத்துங்கள், அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யுங்கள்.’ எனக் கூறுகிறது. இந்த வசனம் பெருமானார் (ஸல்) அவர்கள் தொடர்பில் மூன்று கடமைகளை நமக்கு சொல்கிறது.
ஒன்று: ஈமான் கொள்ளுதல்.
இரண்டு: பலப்படுத்துதல்.
மூன்று: கண்ணியப்படுத்துதல்.
பலப்படுத்துதல் என்பதற்கு கட்டுப்படுதல் என இமாம் குர்துபி ஒரு அர்த்தம் கொடுக்கிறார். நபிகளாரின் போராட்டத்தில் இணைந்து போராடுங்கள் என்றும் அர்த்தம் உண்டு. கட்டுப்படுவதோடு கடமையை அல்லாஹ் முடித்து விடவில்லை. கண்ணியப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறான்.
கண்ணியப்படுத்துதலின் ஒரு அம்சமாகத்தான் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள். ‘விடயங்கள் அதற்கான நோக்கங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்’ என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரீஆ சட்ட விதியாகும். எனவே மீலாத் விழா ஸீராவை படித்தல், சுன்னாவை பாதுகாத்தல், நபிகளார் மீதான அன்பை வளர்த்தல் என்ற எண்ணத்தோடும் நோக்கத்தோடும் இருப்பின் அது நற்கூலியை பெற்றுத் தரும் ஒரு அமலாகும்.
எனவே மீலாத் விழாவை ஸீராவை படிப்பதற்கான சந்தர்பமாகவும், நபிகளார் மீதுள்ள அன்பை அதிகரித்து உள்ளங்களை உயிர்ப்பிப்பதற்கான விழாவாகவும் கொண்டாடுவது தவறல்ல. அது வரவேற்கத்தக்க ஒரு விடயமே. விழாவின் விளைவாக நபி (ஸல்) அவர்களை மக்கள் கண்ணியப்படுத்துகிறார்கள். அன்பை புதுபிக்கிறார்கள். ஸீராவை படிக்கிறார்கள். அல்லாஹ்வின் அருட்கொடையை நினைவு கூறுகிறார்கள். மேலும் பெருமானாருடனான தொடர்பு வலுவடைகின்றது. மொத்தத்தில் இவை யாவும் ஷரீஆ விரும்புகின்ற, அங்கீகரிக்கின்ற சிறந்த இலக்குகளாகும். அந்த வகையில் சமூக மற்றும் கலாசார பெறுமானங்கள் கொண்ட எந்தவொரு நல்ல நிகழ்வும் வரவேற்கத்தக்கதே.
முஹம்மத் பகீஹுத்தீன்.