அறவழியில் அன்பினை போதித்தவர்:மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று!

Date:

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 2 அன்று,  கொண்டாடப்படுகிறது. தேசத்தந்தை  எனப் போற்றப்படுவது வரை  அவர் தொடர்பான கட்டுரையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 2-ஆம் நாள் காபாகாந்திக்கும் புத்திலிபாய்க்கும் நன்மகனாய்த் தோன்றினார்.

பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற காந்தியடிகள் இங்கிலாந்து சென்று சட்டக் கல்வி பயின்றார்.பின்னர், தென்னாப்பிரிக்கா சென்றார்.அங்கு இனவெறியையும். நிறவெறியையும் எதிர்த்து, கறுப்பர் இன மக்களுக்கு உரிமைகள் பெற்றுத் தந்தார். 1915-இல் இந்தியா திரும்பினார்.

இருவகைப் புரட்சி:
காந்தியடிகள் ஒரே காலத்தில் இருமுனைப்போர் புரிய வேண்டியதாயிற்று. ஒன்று வெள்ளையரை எதிர்க்கும் அரசியல் புரட்சி. மற்றொன்று இந்திய நாட்டு மக்களை எதிர்த்துச் சமுதாயப் புரட்சி. இவ்விருவகைப் புரட்சிகளையும் அறவழியிலே செய்தார். “ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே! அறத்தின் வழி நின்று, எதிர்த்து நில்! ஆங்கிலப்படை வீரர் தாக்கினால், தாங்கிக் கொள்! எதிர்த்துத் தாக்காதே! கைது செய்தால் அகமகிழ்வோடு செல்! மரண தண்டனை விதித்தால் முகமலர்ச்சியோடு தூக்குக் கயிற்றின் முன் நில்!” என்றார்.
தீண்டாமையே வேண்டாம்! பெண்ணடிமையோ பெருங்குற்றம்! சாதி மத வேறுபாடுகள் வேதனை தருவன! மறவழி மரண வழி! கள்ளுண்டல் நஞ்சுண்டல்! கோழைத்தனம் கூடாது! சோம்பல் அடிமைத்தனம் என்பவை காந்தியடிகளின் சிந்தனைகள்.
காந்தியடிகளின்பண்பு நலன்கள்:
காந்தியடிகள் அகிம்சை, எளிமை, எளியவர்பால் அன்பு, தன்னல மறுப்பு, பகைவரையும் மன்னிக்கும் பரந்த உள்ளம், சுதேசிப் பொருள் மீது பற்று ஆகிய அரிய பண்புகள் காணப்பட்டன. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்றைக் கண்டுபிடித்து அந்நியரை விரட்டிய உலகத்தலைவர் காந்தியடிகள் ஒருவரே. காலந்தவறாமை, புலால் உண்ணாமை, பொய்பேசாமை என்பனவும் அண்ணலின் வாழ்வில் பூத்துக் குலுங்கிய பண்புமலர்களாகும்.
விடுதலைப் போரின் வெற்றி :
வெள்ளையர் ஆட்சியை அகற்றும் போராட்டத்தை அண்ணல் அறவழியில் நடத்தினார். உப்புக் காய்ச்சும் அறப்போர், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுப் பொருள் புறக்கணிப்பு, தனிநபர் அறப்போர், உண்ணாநோன்பு என்னும் வகையில் அண்ணலின் அறப்போர் அமைந்தது. இறுதியாக ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் அறப்புரட்சியில் ஈடுபட்டார்; வெற்றி பெற்றார்.
 இந்நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த தந்தையான அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் சுட்டவனுக்குக் தீங்கிழைக்கக் கூடாது என்றார்.

ஆம். அவர் இந்தியாவின் இயேசுவாய் மறைந்தார். காந்தியடிகள் மறையவில்லை, நம்மோடு இருக்கிறார், நம்மோடு கலந்துவிட்டார் என்று எண்ணுதல் வேண்டும்.

நன்றி: விகடன்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...